Friday, May 31, 2013

உரைப்பதெலாம் உளறலே!

முன்னைப்போல் இசைத்திடென்று மன்றாடிக் கேட்டிடுவார்; 
முன்னைப்போல் இசைத்தாலோ முந்தையது தானேவென்பார்! 
உன்னைப்போல் இசைதந்தால் வேறுவிதம் வேண்டிடுவார்; 
உன்னைப்போல் இசைக்காவிடில் எவ்விதம் ஏற்கவென்பார்! 

விண்ணைப்போல் விரிந்து வளியைப்போல் நிறைந்து 
மண்ணைப்போல் தாங்கி மகாநதியைப்போல் பரந்து 
பண்ணால்தம் மனத்துயர் தீய்த்திடும் உன்பேரறிவை 
எண்ணும் வழியற்றோர் உரைப்பதெலாம் உளறலே!

Sunday, May 12, 2013

அன்னையர் தினம்

அம்மா!

நீ இருந்திருந்தால் இந்த நாள் எல்லோரையும் போல் எனக்கும் 'அன்னையர் தினம்' ஆக இருந்திருக்கும்.

ஆனால், இவ்வுலகமெனும் சிறு வெளியைக் கடந்த பேராற்றலாய் என்னுடன் இருந்து என்னுள் இருந்து என்னை வழிநடத்தி மனிதனாய் இயங்கவைத்து உன் அருளால் எனக்குப் பெயரும் புகழும் வாழ்வும் வளமும் தரும் என் மதியாய் நீ என்றென்றும் இருப்பதால் இந்நாள் மட்டுமல்ல, எந்நாளும் எனக்கு உன் நாளே - உன்னாலே!

அனைவருக்கும் எனது இதயம் கனிந்த அன்னையர் தின வாழ்த்துகள்!