இன்று இசைஞானி இளையராஜாவின் 82ம் பிறந்தநாள்!
அவரைப் பற்றி எழுத எத்தனையோ இருக்கின்றன! பணிச்சுமை காரணமாகப் புதிதாக எதையும் சிந்திக்க இன்றைய நாள் முழுவதும் எனக்கு வாய்ப்பு அமையவில்லை. ஆனால், நான் அதிகம் கேட்டிராத (கீழே குறிப்பிட்டுள்ள) அவரது இரண்டு பாடல்களைக் கவனித்துக் கேட்கும் வாய்ப்பு எதிர்பாராத வகையில் இன்று கிடைத்தது:
1) 1992ம் ஆண்டு வெளியான கில்லர் என்ற தெலுங்குப் படத்தில் இடம்பெற்ற 'ரம்பலகே ரன்ஸுமொஹுன்னி' என்ற துள்ளலிசைப் பாடல்.
2) இன்னும் மூன்று நாட்களில் வெளியாக இருக்கும் தமிழ்த் திரைப்படமான 'பேரன்பும் பெருங்கோபமும்' படத்தில் இடம்பெற்றுள்ள 'ஒரு மனைவியாய்' என்ற மெல்லிசைப் பாடல்.
மேற்கூறிய இரண்டு பாடல்களும் எல்லா விதங்களிலும் வேறுபட்டவை. ஆனால், அவற்றில் உள்ள முத்திரை ஒன்று - எவராலும் முழுக்க நகலெடுக்க முடியாத ராஜமுத்திரை! என்னென்ன உணர்ச்சிகள் உயிர்களுக்கு ஏற்பட வாய்ப்பு இருக்கிறதோ அத்தனைக்கும் அவர் பாடல் செய்திருக்கிறார் எனினும், அதனினும் சிறந்ததாக நான் பார்ப்பது, அவற்றில் உள்ள அவரது தனித்துவத்தையே!
கடந்த 30 ஆண்டுகளாக ஒரு ஆத்மார்த்தமான ரசிகனாக அவரது படைப்புகளைத் தேடித் தேடிக் கேட்கக்கூடிய எனக்கு, பழைய பாடலோ புதிய பாடலோ, அவரது எந்த ஒரு பாடலையும் முதன்முறையாகக் கேட்கும் போது ஏற்படும் வியப்பு குறைந்ததே இல்லை என்பது இப்போதெல்லாம் எனக்கு வியப்பாக இல்லை. எப்போதும் இன்ப இசை ஆச்சர்யங்களைத் தனக்குள் வைத்திருந்து நாம் விரும்பும் போதெல்லாம் நமக்குத் தரும் நமக்கே நமக்கான ஒரு அட்சய பாத்திரத்தை எவ்வாறு வார்த்தைகளால் புகழ்ந்து தீர்த்திட முடியும்?
இன்னும் நூறாண்டு காலம் வாழ்ந்து இன்னும் பல்லாயிரம் இசைக்காவியங்கள் படையுங்கள், எங்கள் இசை ஆதவனே!
![]() |
| எங்கள் இசை ஆதவனே! |
