Showing posts with label அன்பு. Show all posts
Showing posts with label அன்பு. Show all posts

Sunday, August 04, 2024

நண்பன் கண்ணதாசனுக்குப் பிறந்தநாள் வாழ்த்து!

மருத்துவம் நம்மைச் சந்திக்க வைத்தாலும் 
இசையே நம்மை இணைத்து வைத்தது! 
உன்னைப்போலத் தான் நானென்று நீயும் 
என்னைப்போலத் தான் நீயென்று நானும் 
உணர்ந்த அத்தருணத்தில் தொடங்கிய நட்பால் 
எவ்வளவு இசையை பருகியிருப்போம் ஒன்றாக!
எத்தனை மேடைகளில் இசைத்திருப்போம் நன்றாக!
இசைஞானியின் பெருமையினை இணைந்து நாம்உணர 
இசைந்த நம்மனங்கள் வளர்த்த அன்பினால் 
உன்வாழ்வில் நானும் என்வாழ்வில் நீயும் 
இரண்டரக் கலந்திடவே ஒன்றானது நம்வாழ்வு! 
உன்னைநான் வாழ்த்துவதும் என்னைநீ வாழ்த்துவதும் 
வார்த்தைகளாலா? அல்ல! ஒன்றான மனத்தால்!

"ஹே ராஜா! ஒன்றானோம் இன்று! 
இனி நாம் தானே ரெண்டல்ல ஒன்று!"

என்று நமக்குப் பொருத்தமாகப் 
பாடல்தந்து 
நட்பே வாழ்த்திய பெருமையுடன் சொல்வேன்:

Happy Birthday, Partner! Wishing you many more happy returns of the day!

Friday, July 12, 2024

அன்பு பாரமா?

சுமக்க முடியாத பாரமாக மாறிவிடுவதில்
தன்னிகரற்றுத் திகழ்கிறது "அன்பு"!

சில நேரங்களில்
அது மற்றவர்கள் நம் மீது வைத்திருக்கும் அன்பாக இருந்தாலும்,
பல நேரங்களில்
அது நாம் மற்றவர்கள் மீது வைத்திருக்கும்
அன்பாகவே இருக்கிறது!

Wednesday, July 15, 2020

சிறிதிலும் பெரிதுண்டு

15 ஜூலை 2017:

வில்லின் அம்பால்வீழா மாவீரனும் அன்பிலாச் 
சொல்லின் அம்பால் நிலைகுலைவான் எனில் 
அறிக அவன்மனம் யாருக்கும் தீங்கிழைக்கா 
சிறிய குழந்தையின் பேருள்ளமென்று!


15 ஜூலை 2019:

நிலைகுலைந்த அச்சிறிய குழந்தை அச்சத்தால் தன் பேருள்ளத்தைக் குறுக்கி மற்ற எவரையும் போல நமக்கென்ன என்ற நிலையினை மனம்வெதும்பி எட்டியபடியே தன்னலம் பேணத் தொடங்கிய பின் உலகம் அதனைப் பாராட்டிப் பறைசாற்றியது "நீ நன்கு வளர்ந்துவிட்டாய்" என்று!

Sunday, March 30, 2014

அன்பின் நட்பும் நட்பின் அன்பும்

நட்பு எனக்கு அன்பு செய்ததால் அன்புக்கு நட்பானேன்;
அன்புடன் பழகப் பழகவே பல்கிப் பெருகியது நட்பு!
அன்பின் நண்பனென்றும் நட்பின் அன்பனென்றும்
நட்பும் அன்பும் எனைக்காத்துக் கொண்டாட,
வியந்து நின்றது வினை - என்னை 
வீழ்த்தும் வழி எதுவென்று அறியாது!

துன்பமெனும் அம்பை இறுமாப்புடன் எய்தது வினை; 
ஆறுதலால் உயிர்த்தெழச் செய்தது நட்பின் அன்பு!
துரோகம் கொண்டு நிலைகுலைக்க எண்ணியது வினை;
ஆதரவாய்க் கயமையை வென்றது அன்பின் நட்பு!
தாக்கவோர் ஆயுதமின்றித் திகைத்த வினை
தயங்கியே ஏற்றது தான் தோற்றதை!

Saturday, August 31, 2013

கடவுள் ஏன் காணாமல் போனார்?

கடவுள் ஒரு நாள் என் முன்னே தோன்றினார்!
"என்ன வரம் வேண்டும்?" என்று என்னை வினவினார்! 
கண்ட காட்சியை நம்ப முடியா நான் கேட்டதை 
எண்ணி வியந்த படியே முடியா தென்று மறுத்தார்! 

"வேண்டியதைத் தராமல் வேறு என்ன தருவீர்?" என்றதற்கு
"அருள் தருவேன்; பிறருக்கு அருளும் மனம் தருவேன்;
வேண்டா வெறுப்பை மறந்து மகிழும் இதயம் தருவேன்;
அன்பை நகையாய் உன் அகத்துக்குத் தருவேன்" என்றார்!

மெல்லச் சிரித்த நானோ கடவுளைப் பார்த்துக் கேட்டேன்:
"ஒரு வரம் கேட்கச்சொல்லி பல வரங்கள் தருபவரே!
மெல்லிசையை ரசித்துணரும் குணம் வேண்டும் என்றேனே! - அந்த
ஒன்றைத் தந்தால் இத்தனை வரங்கள் வேண்டாமே!" என்று!

தோல்வியெனத் தோன்றியதோ என்னவோ, "வேறேதும் வேண்டுமா?" என்றார்!
"சற்றே சிந்திப்பீர்! பண்ணால்யாம் பெருமின்பமெலாம் உம்மால் தரத்தகுமோ?
தோழனாய்த் தோள்தர நல்லிசை விருப்பம் ஒன்றிருந்தால் அவ்விசையின்
சந்தத்துக்குச் சொல்போல் இவையெலாம் தாமே பின்வருமே!" என்றேன்!

சொல்லி முடித்துத் திரும்பிப் பார்த்த நான் அதிர்ந்தேன்!
சொல்லாமல் கொள்ளாமல் கடவுள் காணாமல் போயிருந்தார்!

Wednesday, July 31, 2013

வாழ்த்து

வாழ்த்தென்றால் என்னவென்று வினவினான் நண்பன் - 
வாழ்கவெனும் சொல்லெல்லாம் வாழ்த்தோ என்றவாறே!
வாழ்த்தத்தயங்கா நானோ புன்னகைத்தபடி மறுத்தேன் - 
வாழ்த்தில் சிக்கலென்ன என்றுஅவன் மனம்வியக்கவே!

​அவர்பால் தன்னகத்தில் தோன்றும் உண்மையன்பைச்  
செல்வமாய் அவருணர உரைப்பதே வாழ்த்தென்றேன்!
அன்பில்லா ஒருவரின் பொய்நகையுடன் வெளிப்படும் 
செல்லாத சொல்லெல்லாம் வாழ்த்தல்லவே யென்றேன்!

Tuesday, February 28, 2012

எனக்குப் பிடித்த சட்டை

ஆடை அங்காடியில் விற்பனைக்கு வைத்திருந்த அத்தனை சட்டைகளையும் ஆராய்ந்து, நான்கைத் தேர்ந்தெடுத்து, அவற்றில் எது பிடித்திருக்கிறது என்று சுட்டிக்காட்டச் சொன்னாள் என்னவள். 

நான் சுட்டினேன் - அவளை!