ஆம்!
தான் இனி அந்நியருக்கு அடிமையாக இல்லையென்ற இறுமாப்பில்
தான் அடிமையாக நடத்துவோரின் உரிமையைச் சட்டை செய்யாது
தான் உருவாக்கும் கற்பிதங்களால் சமத்துவம் மலராது தடுத்தபின்
தான் சுதந்திரம் அடைந்த இந்நாளை
அனைவரும் கொண்டாடுமாறு
தான் கட்டளையிட்டுக் கேட்பதால்
எல்லோரும் மதித்து நடந்திடத்
தான் இந்நாளென்று எண்ணுவோர் அறிவரோ விடுதலையின் பொருளை?
சுதந்திரம் தனி மனிதனுக்கானது!
இயல்பான தன்னலம் நிறைந்தது!
தானும் தன்னைச் சார்ந்தோரும்
தன்னைப் போன்றோரும் எவ்வித
இடையூறும் இன்றி வாழ்வதே
சுதந்திரமென எண்ணும் இவர்கள்
தான் அடிமைத்தளையில் இருந்து
மீள்வது மட்டுமின்றித் தன்னால்
வேறு யாரும் அடிமைப்படாமல்
அனைவரும் சமம் என்றெண்ணும்
உலகை உருவாக்கப் போராடுவதே
விடுதலையென என்று அறிவரோ?
எனினும், நம்பிக்கையுடன் கொண்டாடுவோம்! சீக்கிரம் நல்லவை நிகழுமென்று!
அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துகள்!
- ஜ. விஜய் வெங்கட்ராமன்
15 ஆகஸ்ட் 2023