Friday, January 02, 2015

தான்

தானாய் வரும் நன்மைதனைக் கடந்துத் 
தன்னால் நிகழும் நன்மை யாதென நினைந்துத் 
தானாய் வரும் தீமைதனைத் தவிர்த்துத் 
தன்னால் தீமை நிகழாதென மாந்தர்குலம் சூளுரைக்கத் 
தானாய்த் தோன்றிய இப்பாடலால் வேண்டினேன்
தன்னால் பூத்த அழகுப் புத்தாண்டு மலரை!

Sunday, March 30, 2014

அன்பின் நட்பும் நட்பின் அன்பும்

நட்பு எனக்கு அன்பு செய்ததால் அன்புக்கு நட்பானேன்;
அன்புடன் பழகப் பழகவே பல்கிப் பெருகியது நட்பு!
அன்பின் நண்பனென்றும் நட்பின் அன்பனென்றும்
நட்பும் அன்பும் எனைக்காத்துக் கொண்டாட,
வியந்து நின்றது வினை - என்னை 
வீழ்த்தும் வழி எதுவென்று அறியாது!

துன்பமெனும் அம்பை இறுமாப்புடன் எய்தது வினை; 
ஆறுதலால் உயிர்த்தெழச் செய்தது நட்பின் அன்பு!
துரோகம் கொண்டு நிலைகுலைக்க எண்ணியது வினை;
ஆதரவாய்க் கயமையை வென்றது அன்பின் நட்பு!
தாக்கவோர் ஆயுதமின்றித் திகைத்த வினை
தயங்கியே ஏற்றது தான் தோற்றதை!

Friday, February 28, 2014

திரையும் திறையும்

பனித்திரை சூழும் பண்புடை நாட்டுக்குப் 
பணித்திறை விலகாப் பற்றுடன் சென்றிட 
மனத்திரை திறந்து மகிழ்வோர் வாழ்த்தும்  
மணத்திறை போதுமே மதியுளோர் வெல்ல!

Friday, January 31, 2014

திறனாய்வு

தன்னை உணராது தன்திறன் அறியாது 
தன்னைத் தானே தாழ்த்தி உயர்த்தும் 
தன்மையால் நன்மை நேராதென்று உணரும் 
தன்மையே தாழ்வற்ற உயர்வான திறன்!

Saturday, December 28, 2013

நன்றியுள்ள நாய்க்குட்டி

இன்னா எண்ணுதலை இழிந்ததென்று உணர்த்தாது 
இந்நாளில் இவையெலாம் இயல்பென உரைக்கும் 
என் கயமையைக் கேட்டுப்பழகியபடியே வளர்ந்திடும் 
என் மனசாட்சியும் நன்றியுள்ளதோர் நாய்க்குட்டியே!

Friday, November 08, 2013

அரிதிலும் அரிது கேள்!

எளிதிலும் எளிது - யாரையும் மன்னிக்கும் மனது இல்லாமலிருப்பது; 
எளிது - தனக்குப் பிடித்தவர்களை மட்டுமே மன்னிக்க நினைப்பது;
எளிதிலும் அரிது - தெரியாமல் மோதிச்சென்ற தெரியாதவரை மன்னிப்பது;

அரிதிலும் எளிது - தவறிழைத்த நண்பர்களையும் மன்னிக்காமல் தண்டிப்பது; 
அரிது - கொடிய பகைவனையும் பெருந்துரோகியையும் மன்னித்து அருள்வது; 
அரிதிலும் அரிது - தன்தவறுகளை ஒப்புக்கொண்டு மன்னிக்க வேண்டுவது!

Thursday, October 31, 2013

தீர்ப்பு

தீர்ந்திடாத இன்னலும் தீர்ந்திட வேண்டித்
தீராததோர் இறையைத் தீர்வுக்கென நாடித்
தீர்க்கமாய் நம்பியும் தீரவில்லை இன்னல் -
தீர்ப்பதுதன் கையிலென்று உணராதோனுக்கு!