Showing posts with label இயல்பு. Show all posts
Showing posts with label இயல்பு. Show all posts

Saturday, December 28, 2013

நன்றியுள்ள நாய்க்குட்டி

இன்னா எண்ணுதலை இழிந்ததென்று உணர்த்தாது 
இந்நாளில் இவையெலாம் இயல்பென உரைக்கும் 
என் கயமையைக் கேட்டுப்பழகியபடியே வளர்ந்திடும் 
என் மனசாட்சியும் நன்றியுள்ளதோர் நாய்க்குட்டியே!

Wednesday, April 10, 2013

படைப்பாளனின் பேரிலக்கணம்


கெட்டவர்களின் கெட்டவற்றை நயவஞ்சகமெனச் சித்தரித்து  
கெட்டவர்களின் நல்லவற்றை நாயகர்பண்பெனப் போற்றாமல் -
நல்லவர்களின் கெட்டவற்றை வாழ்வியல்பென உணரவைத்து
நல்லவர்களின் நல்லவற்றை மாமனிதமென எடுத்துரைத்தலே -
கெட்டதை வளர்க்கவிரும்பாத கேடிழைக்க விழையாத
நல்லதொரு திரைப்படப் படைப்பாளனின் பேரிலக்கணம்!

Wednesday, February 27, 2013

திங்கள்

திங்களுக்கோர் எண்ணப்பதிவை எழுதநினைத்துத் தொடங்கினேன்
திங்களன்று உவகையுடன் பள்ளிசெல்லும் மாணவனைப்போல்!
திங்களாய் மனவானின் ஓரத்தில் வளர்ந்துதேய்ந்தேயிருந்தாலும்
திங்களிறுதியில்தான் முழுநிலவுநாளோ என் கவிநிலவுக்கு?

Saturday, September 01, 2012

தன் இயல்பால் அமைவதன்றோ தன் வாழ்வு?

பொன்னின் இயல்பு - தன்னை அணிந்தவர்க்கு அழகூட்டி மதிப்பூட்டுவது! எந்நிலையிலும் இன்னொரு உலோகத்துடன் இணைவதால் பொன்னின் மதிப்பு உயர்வதுமில்லை; தாழ்வதுமில்லை. பொன்னே ஆயினும் சூரிய ஒளி அதன் மேல் படும் போது ஏற்படும் பிரதிபலிப்பின் வீச்சைக் கொண்டு தான் அதன் குன்றா வீரியத்தை நாம் உணர்கிறோம். 

எது அதன் மேல் பட்டாலும் படாவிட்டாலும் அது எப்போதுமே பொன்னாய்த் தான் இருந்திருக்கிறது என்பது மட்டும் சிலருக்குத் தான் புரிந்திருக்கிறது!

Saturday, May 30, 2009

கல்வி

மெழுகு அறியுமோ உருகுவதன் பலனை?
மேகம் உணருமோ பொழிவதன் பயனை?
இயல்பால் நிகழுமிவை சொல்லும் பாடம்:
ஈகை சிந்திக்கா தென்பதே!