Dear Friends,
This is my reply to writer Pa. Raghavan's Tamil article 'தமிழே, தப்பிச்சுக்கோ!' (http://www.writerpara.com/paper/?p=11 and http://idlyvadai.blogspot.com/2008/02/blog-post_20.html).
Yours Always Musically,
Vijay.
அனைவருக்கும் வணக்கம்!
என்னடா பா. ரா. வின் எழுத்துக்கு மறுப்புரை எழுதுவதாகச் சூளுரைத்து விட்டுக் காணாமல் போய்விட்டானே என்று எண்ணிக் கொண்டிருக்கும் போது மீண்டும் வந்துவிட்டேனோ? கவலை வேண்டாம் - நான் சொல்ல வந்ததைச் சொல்லிமுடித்த பின் மீண்டும் (நீங்கள்) காணாமல் தான் (நான்) போகப் போகிறேன் - என் வேலையைப் பார்த்துக்கொண்டு!
இவ்வளவு தாமதமாய் வந்ததற்குக் காரணமிருக்கிறது - இப்போதுள்ள பல எழுத்தாளர்களையும் விமர்சகர்களையும் போல எழுதுபொருளைப் பற்றி எதுவுமே தெரியாமல் மனதுக்குத் தோன்றியதையெல்லாம் எழுதுவதில் எனக்கு உடன்பாடில்லை! அதனால் தான் இந்த ஓராண்டு இடைவெளியில் இளையராஜாவின் வெண்பாக்களையும் அவற்றிற்கான் பொழிப்புரைகளையும் அவ்வப்போது படித்துக்கொண்டு இந்த முயற்சிக்காக என்னை நான் கொஞ்சம் கொஞ்சமாகத் தயார்படுத்திக் கொண்டிருந்தேன் - எதற்காக என்றால்: எழுதுவது என் கருத்தாக இல்லாமல் உண்மையையொற்றியதாக இருக்க வேண்டும் என நான் விரும்புவதால்!
ஆனால், அவருடைய நிறைய வெண்பாக்களைப் படித்தபின், யாருக்கு பதில் சொல்லி என்ன ஆகப் போகிறது என்று தோன்ற வைத்து விடுகிறார் இளையராஜா! ஆம் – என் உள்ளத்தையும் சிந்தனைகளையும் நான் எண்ணிப்பார்த்தேயிராத வேறோர் தளத்திற்குக் கொண்டு சென்று இயங்கச் செய்கின்றன அவரது எழுத்துக்கள்! ஒரு வேளை பா. ரா. இப்படி ஒரு அதிரடி வேலையைச் செய்திராவிட்டால் இளையராஜாவின் முதல் வெண்பா நூல் வெளியான போது அதைக் கொஞ்சமாய்ப் படித்துப் பார்த்துவிட்டுப் ‘புரியவில்லை’ என்று விட்டுவிட்ட எனக்கு, மீண்டும் அவருடைய வெண்பாக்களைப் பொருளுணர்ந்து படிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றாமலேயே இருந்திருக்கலாம்! இதற்காகவே, பா. ரா. வுக்கு என் சிறப்பு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ள நான் கடமைப்பட்டிருக்கிறேன்!
எனினும், செய்வதாகச் சொன்னவற்றைச் செய்யாமல் விட்டுவிடுவது சரியல்ல என்பதால் பா. ரா. விற்கும் அவரது சீடர்களுக்குமான என் பதில்கள் இதோ:
“அவர் ஏன் எழுத விரும்புகிறார் என்கிற கேள்விக்கு பதில் கிடைப்பது சிரமம்.” – இதற்கான பதிலை யாருக்கும் சொல்ல வேண்டிய அவசியம் இளையராஜாவுக்கு இல்லையென்றாலும் அனேகமாய் அவரது ஒவ்வொரு நூலின் முகவுரையிலும் அதைத் தெளிவாகவே விளக்கியிருக்கிறார் அவர். அது சரி, அவற்றையெல்லாம் நாம் படித்தால் தானே ;-)
ஒரு எடுத்துக்காட்டாய், “யாதுமாகி நின்றாய்...” என்ற வெண்பா நூலில் அவர் எழுதிய முன்னுரையிலிருந்து: “இசையை வேலையாகச் செய்யும் வேளையில் – ஏதாவது ஒரு நேரம் சும்மா இருக்க நேர்ந்தால் – இந்த மனமானது சும்மா இருக்க விடுவதில்லை! – சரி ஏதாவது செய்யலாம் என்றால் – பக்கத்தில் இருப்பது பேனாவும் பேப்பரும் தான். அப்படியே கையில் எடுத்து ஏதாவது எழுதத் தொடங்கினால் – அது – இப்படித்தான் உங்கள் கையிலிருக்கும் வெண்பாக்களாக வருகிறது. நான் என்ன செய்ய?” – இன்னும் நிறைய சொல்கிறார் – அவற்றை இப்போதாவது அந்நூலைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள், உங்களுக்கு மனமிருந்தால்!
“ஆனால் அதை ஏன் எல்லோரும் தூக்கித் தலையில் வைத்துக் கொண்டாடுகிறார்கள் என்பது புரியவில்லை. வாழ்நாளெல்லாம் புகழ்ந்து தீர்க்க அவருடைய இசை இருக்கிறது. போதாதா? எதற்காக அவரைக் கொம்பு சீவி விட்டு வெண்பாவும் விருத்தமும் எழுத அல்ல - யாக்க வைக்கிறார்கள் என்று தெரியவில்லை.” – தூக்கித் தலையில் வைத்துக் கொண்டாடுவதில் இளையராஜாவுடைய தவறு என்னவென்று எனக்குப் புரியவில்லை. இக்கேள்வியை நீங்கள் அவரை அப்படித் தூக்கி வைத்துக் கொண்டாடுபவர்களிடம் தான் கேட்டிருக்க வேண்டும். அவருடைய இசையை மட்டும் தான் வாழ்நாளெல்லாம் புகழ்ந்து தீர்க்க வேண்டும் என்பது உங்களுடைய விருப்பமாக இருக்கலாம். அதனாலேயே, அவருடைய மற்ற திறமைகளை வேறு யாரும் கூடப் பாராட்டக் கூடாதா? அவரை ஒரு புலவராகப் பார்க்க உங்களுக்குப் பிடிக்கவில்லையென்றால் அதைப் பொதுவிதியாக்க நினைக்கிறீர்களோ? சென்ற பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள அவருடைய சொற்களிலேயே அவர் அவராகவே தான் எழுதுகிறார் என்பது தெளிவாகிறது – அவரைப் போய் யார் கொம்பு சீவி விட முடியும்? நல்ல நகைச்சுவை, போங்கள்!
“மௌனம், மரணம், தவம், மனிதன், ஆத்மா, உள்ளே, வெளியே, வானம், வெட்டவெளி, அறிந்தவை, அறியாதவை, விடுதலை, வேள்வி என்று வரிசையாக நூறு சொற்களை இந்த ரகத்தில் எடுத்து வைத்துக்கொண்டு பெர்முடேஷன் காம்பினேஷனில் தொகுத்தால் கிடைக்கக்கூடிய கவியுருவங்கள் அவருடையவை. ” – சிரிக்கத் தான் தோன்றுகிறது, பா. ரா. சாரே! உங்கள் கவிஞானம் இவ்வளவு தானா? சரி, உரைநடையில் உலகசரித்திரங்கள் எல்லாம் எழுதும் உங்களுக்குச் செய்யுள் இலக்கணமும் பொருள்கோளும் இலக்கியரசனையும் வாழ்வியல் உண்மைகளும் புரியும் என்று நாங்கள் எதிர்பார்த்தது தவறு தான்! அதெல்லாம் இருக்கட்டும் – நீங்கள் கூறும் இக்கவியுருவங்கள் புதுக்கவிதை வகையில் அவர் எழுதியவை; வெண்பாக்கள் இல்லை. இரண்டு கவி வகைகளுக்கும் உங்களுக்கு வேறுபாடு தெரியும் என் நான் இன்னமும் நம்புகிறேன்! இளையராஜாவின் புதுக்கவிதைகளையே பழிக்க வேண்டுமென்றால் அதற்குமுன் நீங்கள் பல ‘கவிஞர்’களைக் ‘கவனிக்க’ வேண்டியிருக்குமே! அது சரி, நமக்கு இலகுவான இலக்கு இளையராஜா தானே – நாம் ஏன் மற்றவர்களைப் பற்றி எண்ண வேண்டும் ;-)
அடுத்த கருத்துக்குச் செல்லுமுன் நீங்கள் குறிப்பிட்டுள்ள தலைப்புகளில் ஒன்றான ‘விடுதலை’ என்னும் தலைப்பில் இளையராஜா எண்பதுகளின் தொடக்கத்தில் ‘வெட்டவெளிதனில் கொட்டிக்கிடக்குது’ என்னும் நூலில் எழுதிய ஒரு புதுக்கவிதையை என் நினைவிலிருந்து எழுதுகிறேன் – அது எவ்வாறு பெர்முடேஷன் காம்பினேஷனில் தொகுக்கப்பட்டது என நீங்கள் அறிவித்தால் நான் மகிழ்வேன். இதோ அக்கவிதை:
விடுதலை
விடுதலையின் தந்தைதான் சர்வாதிகாரம்.
சர்வாதிகாரம் இல்லையெனில் விடுதலைக்குப் பிறப்பேது?
சர்வாதிகாரம் விரும்புவதும் தன் சுதந்திரத்தை!
விடுதலை விரும்புவதும் தன் சுதந்திரத்தை!
விடுதலையும் ஒரு சர்வாதிகாரமே!
தனக்கு எல்லா அதிகாரமும்
வேண்டும் என்று போராடுவதுதானே
விடுதலையின் கொள்கை!
உண்மை விடுதலை என்பது
தான் இன்னொன்றைக் கட்டுப்படுத்தாமல் இருப்பதும்
தன்னை இன்னொன்று கட்டுப்படுத்தாமல் இருப்பதும் ஆகும்!
“ஆனால் நேற்றைய விழாவில் அவரை மாணிக்கவாசகராகவும் சுந்தர மூர்த்தி நாயனாராகவும் பத்ரகிரியாராகவும் பட்டினத்தாராகவும் உருவகப்படுத்தி (ஒரு அம்மாள் - அவர் ஒரு புகழ்பெற்ற பட்டிமன்றப் பேச்சாளர், பெயர் மறந்துவிட்டது. அறுபத்தி நாலாவது நாயன்மார் என்றே அடித்துச் சொல்லிவிட்டுப் போய்விட்டார்.) பேசிய தமிழறிஞர்களின் வீர உரைகளைக் கேட்டபோது அடிவயிறு கலங்கிவிட்டது. சுகி. சிவமும் தெ.ஞானசுந்தரமும் இளையராஜாவைக் காட்டிலும் சிறந்த புலவரே இல்லை என்று பேசுவதைக் கேட்டால், இத்தனை காலம் இவர்கள் வாயாரப் புகழ்ந்த கம்பனும் பாரதியும் அரை டிரவுசர் அணிந்து ராஜாவின் முன் மண்டியிட்டு அமர்ந்து யாப்பிலக்கணமும் இன்னபிறவும் படிக்கவேண்டுமென்று சொல்லாமல் சொல்லுவது போல் இருந்தது.” – பேசிய பிரபலத்தின் பெயரை மறந்துவிட்டாலும் அவர் சொன்ன கருத்தை ‘மறக்காமல்’ வைத்திருக்கிறீர்களே – சபாஷ்! அது இருக்கட்டும் - அப்பேச்சாளர்கள் அப்படிப் பேசினால் அதற்கு இளையராஜா என்ன செய்வார்? புலவர்கள் பொதுவாகவே மொழியழகுக்காகவும் கருத்துச்சுவைக்காகவும் கொஞ்சம் மிகைப்படுத்திப் பேசுபவர்கள். இன்னும் சொல்லப் போனால், மிகை என்பது கவியின் இன்றியமையாததோர் அங்கம் என்று நான் உங்களுக்குக் கூற வேண்டியதில்லை! அது ஒரு வேளை எல்லை மீறிப் போயிருந்தாலும், புகழ்பவர்களை விட்டுவிட்டுப் புகழப்படுபவரைச் சாடுவதில் என்ன நியாயம்?
“அத்தனாம்பெரிய தமிழறிஞர்களெல்லாம் புகழ்கிறார்களே என்று அவரும் தம்பங்குக்கு எம்பாவாய், எம்பாவாய் என்று வம்படியாக த் திருவெம்பாவை ஸ்டைலில் பா, பாவாகப் பாடிப் பொழிந்து தீர்க்கிறார்.” – யாருடைய புகழ்ச்சிக்காகவும் அவர் எழுதத் தொடங்கவில்லை என்பதை அவர் தெளிவாகப் பல இடங்களில் எழுதியும் கூறியும் இருக்கிறார். மேற்குறிப்பிட்ட ‘யாதுமாகி நின்றாய்...’ முன்னுரை அதற்கு ஒரு உதாரணம். இன்னும் சொல்லப் போனால், அதீதமான புகழ்ச்சி தான் அவரை வெறுப்பேற்றும் என்பதை நான் கோவையில் 2002-ஆம் ஆண்டில் நடந்த இது போன்ற ஒரு நூல் அறிமுக விழாவில் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். அவரோடு கொஞ்சமாவது பழகக்கூடிய வாய்ப்பைப் பெற்றவன் என்ற முறையில் ‘அவர் வெற்றுப் புகழ்ச்சியை விரும்புபவர்’ என்று நீங்கள் சொல்வதை நான் வன்மையாக மறுக்கிறேன்.
“இளையராஜாவுக்குச் செய்யுள் என்பது சர்க்கரை வியாதிக்காரருக்குச் சிறுநீர்போல் தங்குதடையற்றுப் பொழிந்துகொண்டே இருக்கிறது. இதன் அபாயம் என்பது சர்க்கரை வியாதியின் அபாயமேதான் என்பது ஏன் அவருக்குப் புரியவில்லை என்று தெரியவில்லை.” – கண நேரத்தில் மிகச்சிறப்பானதொரு படைப்பை உருவாக்கக் கூடிய ஒரு அசாதாரணக் கலைஞனை இதற்கு மேல் யாரும் அவமானப்படுத்த முடியுமா என்பது சந்தேகமே! ‘நான் அவரது இசையைச் சொல்லவில்லை; எழுத்தைத்தான் சொன்னேன்’ என நீங்கள் கூறலாம். உங்கள் பாணியில் ஆதாரமில்லாமல் வெறும் ‘கருத்து’பூர்வமாக விமர்சிப்பதென்றால் அவரது இசையைக் கூட இப்படி விமர்சிக்கலாம்! எல்லாம் சரி, நீங்கள் சொல்வது போல் அவர் எழுத்தில் சரக்கே இல்லை என்று வைத்துக் கொண்டாலும், அவர் ஏன் எழுதுகிறார் எனக் கேட்பதற்கும் எழுத்து மீதான படைப்புசார் விமர்சனம் என்பதை மீறி அசிங்கமான சொற்களைப் பயன்படுத்துவதற்கும் நீங்கள் யார்? ‘நீங்கள் எழுதுவது எழுத்தே இல்லை; அது எனக்குப் பிடிக்கவில்லை; அதனால் இனி நீங்கள் எழுதக்கூடாது’ என்று நான் சொல்கிறேன் என்று வைத்துக் கொள்வோம். அப்படி நான் சொல்வது சரி என்று நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா திரு பா. ரா. அவர்களே?
இதெல்லாம் இருக்கட்டும் – “இதன் அபாயம் என்பது சர்க்கரை வியாதியின் அபாயமே தான்” என்று எழுதியிருக்கிறீர்களே, இது என்ன என்று சர்க்கரைநோய்க்கு மருத்துவம் பார்க்கும் எனக்கே புரியவில்லை! இளையராஜா இதில் எதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள் ஐயா? ஒரு வேளை நீரிழிவு நோய் மருத்துவத்தைப் பற்றிக் கூட நீங்கள் கட்டுரை எழுதத் தொடங்கிவிட்டீர்களோ? அதுவும் நல்லது தான் – இனிமேல் மருத்துவர்கள் அவர்களுடைய நூல்களைப் படிக்காமல் உங்கள் கட்டுரைகளை ஆராய்ந்தாலே தங்கள் துறையில் மேதைகளாகி விடலாம்! என்னே உங்கள் மருத்துவ சேவை!
ரம்பாவைப் பற்றி நீங்கள் சொன்ன வெண்பா உண்மையாகவே நன்றாகத் தான் இருந்தது! வெண்பா இலக்கணத்தில், ஏதேனும் உயர்ந்த பொருளைப் பற்றி மட்டுமே வெண்பாக்கள் பாடப்பட வேண்டும், என்றொரு விதி இருப்பதாக எனக்குத் தெரியவில்லை! அதனால் தான், ரம்பாவைப் பற்றிய உங்களுடைய வெண்பாவை என்னால் பாவாய் ஏற்றுக்கொள்ள முடிகிறது! ஆனால், உலக வாழ்க்கையைத் தாண்டி இறையை நோக்கிப் பாடப்பட்ட இளையராஜாவின் பாக்களை (இலக்கண விதிகளுக்கு உட்பட்டிருந்தாலும்) வெண்பாக்களாக ஏற்பதில் இருந்து உங்களை எது தடுக்கிறது என்றெனக்குப் புரியவில்லை! உங்களால் விளக்க முடியுமா?
“இவர்களையெல்லாம் கவிஞர்கள், புலவர்கள் என்று அங்கீகரித்து, கிரீடம் சூட்டிவிட்டால் தாளுக்கும் மைக்கும்தான் கேடு. ” – இதிலிருந்து ஒன்றே ஒன்று தான் தெளிவாகிறது. அது – வாஜ்பாயியோ, அப்துல் கலாமோ, இளையராஜாவோ அல்லது வேறு யாராவதோ – இவர்கள் யாருமே எழுத்துத்துறையில் அங்கீகரிக்கப்பட்டுவிடக்கூடாது என்று உங்களுக்குள் ஒலித்துக்கொண்டிருக்கும் ஒரு எச்சரிக்கைக் குரல்! படைப்பதற்கும் அங்கீகரிக்கப்படுவதற்கும் எல்லோர்க்கும் உரிமை உண்டு – அதை ஒருவர் எதிர்ப்பதென்றால் அது படைப்பின் மீதான விமர்சனமாக மட்டுமே இருக்கவேண்டும்! இப்படி எந்த மேற்கோளும் காட்டாமல் வெறும் தனிமனித விருப்பு வெறுப்புகளை மனதில் கொண்டு ஒரு படைப்பாளரை மொத்தமாகவே நிராகரிப்பதும் ஒரு வகையான தீவிரவாதம் தான் என்பது உலகத் தீவிரவாதத்தைப் பற்றிய பேராசிரியரான உங்களுக்குத் தெரியாமல் இருக்காது என நான் நம்புகிறேன்.
“ஏற்கெனவே பாரதியாருக்குக் குறிவைத்து ஏதோ ஒரு காரியம் செய்திருக்கிறார் போலிருக்கிறது. வெளிவரவிருக்கும் ‘அஜந்தா' என்கிற படத்தில் டைரக்டருக்கும் தயாரிப்பாளருக்கும் தெரியாமல் தானே ஏதோ ஒரு பாடல் அல்லது செய்யுள் 'யாத்து' பாடி இணைத்துவிட்டதாகப் பேசும்போது குறிப்பிட்டார். அது பாரதியாருக்கு என்னவோ ஒரு பதில் சொல்கிறதாம். ” – ஐயா பா. ரா. அவர்களே! இளையராஜா பாரதியாருக்கு இப்போதல்ல, நீண்டநாட்களாகவே பதில் சொல்லிக்கொண்டிருக்கிறார்! எடுத்துக்காட்டு:
‘வீதியில் இசைத்தாலும் வீணைக்கு இசையுண்டு
வீணாகிப் போகாது கேட்கின்ற நெஞ்சுண்டு
வேய்ங்குழல் பாடுது வீணையொடு’
என்ற வரிகள் (பாடல்: உன் குத்தமா; படம்: அழகி).
திரைப்படத்தில் இப்பாடலுக்கான சூழ்நிலைப்படி, அழகான பெண்ணை விரும்பும் ‘அத்தனை அழகில்லாத’ நாயகன் அவளை வீணையாகவும் தன்னை வேய்ங்குழலாகவும் எண்ணி, அவளை நிராதரவாய் வீதியில் பார்க்கும் போது, மனதிற்குள் பாடிக்கொள்ளும் நிலைக்கு இது பொருந்தும்! அதே நேரம் அந்த வரிகளில் இன்னொரு பொருளை மறைத்து வைத்ததை இளையராஜா பின்னாளில் விவரித்தார்.
நல்லதோர் வீணையாகத் தன்னைச் செய்தும் ஏன் புழுதியில் எறிந்தாள் என்று சிவசக்தியைக் கேட்கும் பாரதிக்கு ‘வீதியில் இருக்கிறோம் என்று கவலைப்படாதே; எங்கிருந்தாலும் வீணை இசையைப் பொழிவதைப் போலே எவ்விடமிருந்தாலும் நீ பாடு; அந்தப் பாட்டு வீணாகிப் போகாது – ஏனென்றால் அதை கேட்க நானுண்டு, என் நெஞ்சுண்டு – கிராமத்திலிருந்து வந்த நான், நிரம்பப் படித்த உன்னுடன், வீணையுடன் வேய்ங்குழல் இசைப்பது போலே சேர்ந்து பாடுவேன்’ என்று பதில் சொல்வதாகச் சொன்னார்.
இதை எழுதியவர் வேறொரு கவிஞரென்றால் இதற்கு பாராட்டு விழா எடுக்கலாம்! ஆனால், இது இளையராஜா எழுதிய பாட்டாயிற்றே! அது சரி, இசைத்தாயின் தலைமகன் இசையை மட்டும் கவனித்தால் போதும் என்று நீங்கள் எப்படிக் கூற முடியும்? ஒரு வேளை எழுத்தாளர்களுக்கு யாருக்கு வேண்டுமானாலும் கட்டளையிடும் உரிமை உள்ளதோ? அது எனக்குத் தான் தெரியவில்லையோ ஐயா?
பதிவின் இறுதிக்கட்டத்திற்கு வந்தாகிவிட்டது! இன்னமும் ஒரு வெண்பாவைக் கூட முழுமையாக எழுதாமல் எப்படி? இதோ வந்துவிட்டது இளையராஜாவின் வெண்பாக்களில் ஓரளவுக்கு புரிந்துகொள்வதற்குச் சுலபமான ஒன்று:
"பிழைகளைப் பாடினேன் என்றன் பிழையோ?
பிழைபாட ஏன் பணித்தாய் பித்தனே? பித்தாய்ப்
பிழையைப் பிறப்பித்து நீயோ பிழைப்பாய்!
பிழையின் பிழையைத் திருத்து."
இத்துடன் என் வாதத்தை நான் முடித்துக்கொள்கிறேன். நான் எழுதியிருப்பது உண்மை என்பதில் எனக்குச் சிறிதேனும் ஐயம் இல்லாததால், இந்த வாதத்திற்குத் தீர்ப்பு தேடி நான் வேண்டி நிற்கப் போவதில்லை. இந்தப் பதிவைப் படிப்பவர்கள் இதிலுள்ள உண்மைத்தன்மையை தங்கள் மனங்களினுள் உணர்ந்தால் அதுவே எனக்குப் போதுமானது!