Tuesday, September 28, 2010

எங்கே என் மொழிச்சிற்பி?


நண்பனின் தந்தை இறந்துவிட்டதைக் கேள்விப்பட்டு ஓடிச்சென்று நண்பனுக்கும் நண்பனின் குடும்பத்தினருக்கும் உதவியாகவும் ஆறுதலாகவும் இருக்கும் சூழ்நிலை நம் எல்லோருக்கும் என்றாவது ஒரு நாள் ஏற்படும். அப்படி ஒரு நிலை எனக்குச் சமீபத்தில் ஏற்பட்டது - நான் சற்றும் எதிர்பாராத ஒரு நாளில். அவர் நண்பனின் தந்தையாக மட்டுமில்லாமல் என்னுடைய நலம்விரும்பியாகவும் பல வகைகளில் என் மொழியார்வத்துக்கு வழிகாட்டியாகவும் இருந்தவராதலால், அவருடைய இழப்பு எனக்கும் எவ்வகையிலும் மறக்க முடியாத ஏற்றுக்கொள்ள இயலாத ஒன்று என்றாகிப் போனது. அவர் தென்மறை நித்தலின்பனார் - என் கல்லூரித் தோழன் ஏந்தல் இரும்பொறையின் தந்தை.


முதன்முறை நான் அவரைப் பார்த்தது 14 ஆண்டுகளுக்கு முன் - நானும் நண்பன் ஏந்தலும் முதலாண்டு மருத்துவம் பயிலும் போது - அவர்களுடைய இல்லத்தில். ஆங்கிலக்கலப்பின்றித் தமிழ் பேசுவார்; தமிழ்க்கலப்பின்றி ஆங்கிலம் பேசுவார் - இரு மொழிகளிலும் பேச்சிலும் எழுத்திலும் வல்லவர். அப்போதெல்லாம், உரையாடலினூடே எங்கேனும் ஆங்கிலச் சொல் வந்து விடுமோ என்று பயந்து பயந்தே அவரிடம் பேசுவதைத் தவிர்ப்பேன். ஆனால், தமிழிலோ ஆங்கிலத்திலோ ஏதேனும் ஐயமென்றால் அவரிடம் கேட்டால் உடனே சரியான தீர்வு கிடைக்கும். அது போன்ற தருணங்களில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு என் வினாவினைத் தொடுப்பேன். எனக்குத் தான் பயமே தவிர, அவர் எப்போதும் என் கலப்புத்தமிழைக் கடிந்து கொண்டதில்லை. பேச்சில் மெல்லிய எள்ளலும் நகைச்சுவையும் இருக்கும்; ஆனால் என் மனம் நோகும் வகையில் எப்போதும் எதுவும் சொன்னதில்லை. அதே நேரத்தில், நான் எடுத்தாண்ட கலப்புத்தமிழுக்குச் சரியான தமிழ்ச்சொற்களை மறைமுகமாக எனக்கு உணர்த்தவும் மறந்ததில்லை அவர்!


கல்லூரி மலரில் என் முதல் கவிதை வெளியானதை மகிழ்ச்சியுடன் பாராட்டிவிட்டு இரண்டொரு சந்திப்பிழைகளைத் தவிர்த்து கவிதை நன்றாகவே வந்திருப்பதாகச் சொன்னார். அப்போது தான் முதன்முறையாக என்னாலும் சான்றோர் மதிக்கும் அளவுக்கு எழுத முடியும் என்ற நம்பிக்கை என்னுள் விதைக்கப்பட்டது. பின்னர் பல்வேறு சூழ்நிலைகளில் பல்வேறு தளங்களில் தமிழ், ஆங்கிலம், வாழ்வியல், அரசியல், தமிழர் வரலாறு என்று நிறைய செய்திகளைக் கொடுப்பார். அவரிடம் பேசிக்கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது. நான் உண்மையாகவே அவரது கருத்துகளை ஆர்வமாகக் கேட்கிறேன் என்பதை அவர் உணர்ந்த நாள்முதலாய் என்னிடம் தனிப்பட்ட அன்புடனும் உரிமையுடனும் அவர் உரையாடத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் நானும் அவரும் பேசிக் கொண்டிருந்தால் சில மணி நேரங்களுக்கு எங்களை வேறு வேலைகளுக்கு இழுக்க முடியாது என்று அனைவரும் கிண்டல் செய்யும் அளவுக்குச் சென்றது.


தொய்ந்து போயிருந்த எனது தமிழார்வத்தை நான் மீட்டெடுக்க அவரே விளக்காக இருந்தார் என்றால் அது மிகையாகாது. என் தங்கையின் திருமணத்திற்கு என் நண்பர்களை அழைக்கத் தனித்தமிழிலும் ஆங்கிலத்திலும் வாசகங்கள் வரும்படியாய் அழைப்பிதழை எழுத வேண்டும் என்று ஆசைப்பட்டவுடன் எனக்கு வந்தது அவர் நினைவு தான். அதுவரை வெறும் பேச்சாய் மட்டுமே இருந்த எங்கள் பழக்கம் எனக்கு அவரைப் பற்றிக் கற்பிக்காததை அவருடன் அமர்ந்து அழைப்பிதழுக்கான படித் திருத்தங்களை செய்த நாட்கள் எனக்குக் கற்பித்தன. படைப்பின் முழுமைக்கு எழுத்துப்பிழை, சந்திப்பிழை மட்டுமின்றி எழுத்துரு அமைப்பும் கூட எவ்வளவு ஆழ்ந்து கவனிக்கப்படவேண்டிய ஒன்று என்பதை அப்போது தான் நான் உணர்ந்தேன்.


மேலும், திருமண அழைப்பிதழ் தானே, ஒருவருக்கு எழுதியதை எடுத்துக் கொஞ்சம் மாற்றி மற்றொருவருக்குக் கொடுத்து விடலாமே என்று எண்ணாமல், பெண்ணைப் பற்றியும் மணமகனைப் பற்றியும் எல்லா செய்திகளையும் கேட்டறிந்து, அவை அத்தனையையும் இரு மொழிகளிலும் கவிதை நடையாக எழுதித் தருவார். பின்னாளில், என் திருமணத்திற்கு அழைப்பிதழ் எழுதும் போது எனக்காக ஆய்வு செய்து எனக்குப் பொருத்தமானதொரு சங்கப்பாடலை எழுதி என்னை நெகிழச் செய்தார். என் தம்பிக்குத் திருமண வாழ்த்து மடல் எழுதும் போது கெ.டி.வி.ஆர். என்று எல்லோரும் ஆங்கிலத்திலேயே சுருக்கமாகக் குறிப்பிடும் என் தாத்தாவின் பெயரைக் ‘கொளத்தூர் வேங்கடர்” என்று அழைத்து அழகு பார்த்தார். நேரமின்மை காரணமாகவும் அவர் இங்கிலாந்துக்குச் சென்றிருந்த காலமாகவும் அது இருந்தமையால், எனது மற்றொரு தம்பியின் திருமணத்திற்கு அவரால் மின்னஞ்சல் வாழ்த்து மட்டுமே அனுப்ப முடிந்தது. அதற்குப் பிறகு அவரை நான் நேரில் பார்க்கவே முடியாமல் போய்விட்டது.


என் மகள் பிறந்தவுடன் நான் அவளுக்குத் தமிழ்ப்பெயர் சூட்டவேண்டும் என்று ஆசைப்பட்டதை அவரிடம் சொன்னவுடன் அவர் எனக்காக எடுத்த முயற்சிகளையும் செய்த ஆராய்ச்சியையும் நினைக்க நினைக்க மெய்சிலிர்க்கிறது. ‘எழில் ஓவியா’ என்ற பெயரைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம் என்று அவரிடம் சொன்ன போது, அது அவர் பரிந்துரைத்த பெயர்களுள் ஒன்றாக இல்லாத போதும், அவர் அடைந்த இன்பத்திற்கு அளவே இல்லை. குறுஞ்செய்தியிலும் மின்னஞ்சலிலும் “எழில் ஓவியம் சீரும் சிறப்புமாக வளர்கிறதா?” என்று ஆசையாய்க் கேட்பார். மற்றொரு முறை ஒரு உறவினரின் இரட்டைக் குழந்தைகளுக்கு பெயர் வைக்க வேண்டும் என்ற வேண்டுகோளுக்கு இணங்க மிகுந்த முயற்சியெடுத்து ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழ் இரட்டைப் பெயர்களை உருவாக்கினார். தமிழ் அவருக்கு தடையில்லாமல் வரும் என்றாலும் இவ்வளவு முயற்சி தேவைப்பட்டதற்குக் காரணம் இதிலும் அவர் குழந்தையின் பெற்றோரின் விருப்பங்கள், பெயர் அழைக்க எளிதாக இருக்க வேண்டும் என்ற அக்கறை, புதுமையும் நவீனமும் தமிழ்ப்பெயர்களில் மிளிர வேண்டும் என்ற அவா போன்ற பலவற்றை எண்ணிச் செயல்பட்டது தான்.


மொழியார்வம் தவிர்த்து அவரிடம் நான் பார்த்தது தமிழினம் மீது அவர் வைத்திருந்த பற்று மற்றும் நாத்திகமில்லா பகுத்தறிவு என்ற தெளிந்த முதிர்ந்த உறுதியான மனநிலை. இலங்கைப் பெருங்கொலைகள் குறித்தும் தமிழ் தேசியம் குறித்தும் மிகுந்த மனவேதனையுடன் எழுதப்பட்ட அவரது கவிதைகள் மற்றும் அவரது இளமைக்காலத்தில் அவர் இவற்றிற்கென எடுத்த நிலைப்பாடுகள், பங்கேற்றுக் கொண்ட போராட்டங்கள் போன்றவை வரலாற்று ஆவணங்களாகப் பின்னாளில் அறியப்படும் என நான் உறுதியாக நம்புகிறேன். அவ்வாறே, பகுத்தறிவு குறித்த அவரது கண்ணோட்டமும் ’பகுத்தறிவு’ பேசும் எவரும் எண்ணத்தால் கூட இயங்க முடியாத ஒரு உயர்ந்த தளத்தில் சுழன்று கொண்டிருந்ததை நான் கண்டிருக்கிறேன். பகுத்தறிவு இல்லா நாத்திகத்தையும் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களின் பகுத்தறிவு நோக்கையும் அவர் சான்றுகளுடன் விளக்கக் கேட்டு நான் வியந்திருக்கிறேன்.


இவையனைத்தையும் தாண்டி அவரைப் பற்றிச் சொல்ல இன்னொன்று உண்டு. அது: கிடைக்கும் எல்லாத் தளங்களிலும் தமிழ் வளர அவரால் ஆன முயற்சிகளை பலன் எதிர்பாராமல் செய்யும் பழக்கம். மக்கள் தொலைக்காட்சி முதல் இன்று பல தமிழ் வலைத்தளங்களில் உலவும் நவீன சொற்கள் வரை அவரது கைவண்ணத்தில் தமிழ் மேலும் அழகானதும் அறிவுசார்ந்த கலைச்சொற்களைப் பெற்று வலுவடைந்ததும் பலரும் அறியாத ரகசியங்கள். தமிழில் நேரடித் தட்டச்சு (யூனிகோட்) முறை வருவதற்கு முன்பே மிகுந்த சிரமத்துடன் தமிழில் தட்டச்சு முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். ஆர்குட், ஃபேஸ்புக், ப்ளாக்ஸ்பாட் என்ற அனைத்து தளங்களையும் கற்றுக் கொண்டு அங்கெல்லாம் நண்பர்களுடன் உரையாடுவார்.


என்னுடைய வலைக்குறிப்பிலும் முகநூலிலும் நான் எழுதும் எண்ணங்களுக்கு அவருடைய பின்னூட்டங்களைக் காண எப்பொழுதும் ஆர்வமாக இருப்பேன். சில நேரங்களில் பாராட்டாய், சில நேரங்களில் திருத்தமாய், அவருடைய எழுத்து எனக்குக் கைகொடுத்தும் கைதூக்கியும் விடும். என்ன தான் அவர் இவ்வுலகில் இல்லை என்று நான் உணர்ந்தாலும், இப்பதிவுக்கும் அவர் பின்னூட்டம் இடுவாரா என்ற பேராசை மட்டும் எழாமல் இல்லை. ஆனால், இனி அவர் வரப்போவதில்லை.


என்னைப் பொருத்தவரை அவரது மரணம் எனக்குத் தனிப்பட்டதோர் இழப்பு மட்டுமல்ல; தமிழுக்கும் தமிழர்க்கும் ஓர் பேரிழப்பு.


பி.கு.: தென்மறை நித்தலின்பனார் அவர்களைப் பற்றித் திரு. கு. அரசேந்திரன் எழுதிய வாழ்க்கைக் குறிப்பையும், அவருடைய நிழற்படத்தையும் இத்துடன் இணைத்துள்ளேன் – பின்னாளில் அவரைப் பற்றி ஆய்வு செய்யப் போகின்றவர்களுக்கு ஆதாரமாக.


தென்மறை நித்தலின்பனார் திருவடிப் பேறெய்தினார்


தென்மறை நித்தலின்பனார் எனத் தமிழுலகில் பெயர்பெற்ற சான்றோராய் விளங்கிய பெருந்தகை 27.09.2010 அன்று மாலை கோபிச்செட்டிபாளையத்தில்
6.30 ணியளவில் திடுமென மாரடைப்பால் காலமானார். இவர் 09.10.1945 அன்று ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் கம்புளியம்பட்டிச் சிற்றூரில் க.சி.இராமசாமி - வள்ளியம்மை ஆகியோரின் நன்மகனாய் பிறந்தார். நித்தியானந்தன் எனப் பெற்றோரிட்ட பெயரைத் தென்றமிழின்பாலும் மறைமலையடிகளார்பாலும் கொண்ட பெரும்பற்றாலும் தென்மறை நித்தலின்பன் எனப் பிறகு மாற்றிக் கொண்டார்.


கோவை அரசினர் பொறியியற் கல்லூரியில் பொறியியல் பட்டப்படிப்பைக் கற்கும்வேளையில் தமிழ்நாட்டில் 1965 இல் மூண்டெழுந்த இந்தியெதிர்ப்புப் போரில் நித்தலின்பனார் மாணவர் தலைவராய்க் களம்புகுந்தார். சிவனியப் பெருஞ்சான்றோர் ப.சு.மணியம் தலைமையில் மொழிஞாயிறு பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோர் வாழ்த்துரைக்க அத்தாணியில் பிறந்த தீந்தமிழ்செல்வி தேவகாந்தியை 12.12.1973 இல் மணந்துகொண்டார். 1975ஆம் ஆண்டில் சேரர்கொற்றம்என்னும் தமிழ்க்காப்புப் பேரமைப்பை உருவாக்கிய நித்தலின்பனார் கோவைமாநகரில் இருந்த பெயர்ப்பலகைகள் அனைத்தையும் தனித்தமிழில் மாற்றி எழுதும் பெரும்பணியைச் செய்தார். அடுமனை, குளம்பியகம் முதலான தனித்தமிழ்ப்பெயர்கள் தமிழ்ததெருக்களில் பூக்கக் காரணமாக இருந்தவர் இவரேயாவார். பல்லாயிரம் கோடி உருவாச்செலவில் செம்மொழி மாநாடு நடத்திக் கோவையைத் தமிழ்நகராகக் காட்டிய தமிழ்நாட்டரசின் 2010 பணிக்கு முன்னோடியாக நீடுபுகழ் நித்தலின்பனார் திகழ்ந்தார். கோவை மாநகர் முழுவதும் தமிழ்முழக்கம் செழிக்கத் தெருவெல்லாம் நடந்த அந்நாட்களில் நிறைமாதக் கர்ப்பிணியான தன் இல்லத்தரசி தேவகாந்தியையும் உடனழைத்துச் சென்று தமிழ்ப்பணி நம் குடும்பப்பணி என உலகிற்குணர்த்தினார். கோவையில் தாம் இருந்த இல்லத்தில் பாவாணரை சில மாத காலம் தங்கவைத்து அவருக்குக் குடும்பமே பணிவிடைசெய்தது. பாவாணர் நூற்பணியை அக்காலத்தில் நிறைவுடன் செய்தார்.


1975
இல் தம் அருமைத்தாயார் வள்ளியம்மை கடுமையான நோயினால் பாதிப்பிற்குள்ளாகிச் சாப்படுக்கையில் நொடிந்துகிடந்தார். அப்போது சென்னையில் நடந்த தமிழுரிமைப் போரில் பாவலரேறு பெருஞ்சித்திரனாருடன் கலந்துகொண்டு சிறைபுகுந்தார். பிணையலில் வெளியேற நித்தலின்பனார் மறுத்துவிட்டார். நித்தலின்பனாரின் மனவுறுதியை மேலும் ஊக்கும் முகமாக உடனிருந்த பாவலரேறு இரண்டு பாடல்கள் பாடினார். அவை "தண்டமிழ்த் தாய்பெறும் துன்பத்தினும், பெற்ற தாயின் துயரம் மிகப் பெரிதோ" என்பதும் "தமழ்த்தாய் பெறும் துயரைவிடத் தாயின் துயர் பெரிதோ" என்பதும் ஆகும்.


1978
இல் தமிழினத் தொண்டுக்காகவே திரு. நித்தலின்பனார் குடும்பத்துடன் சென்னை வந்து தங்கினார். தமிழ்-தமிழீழம் குறித்த ஆதரவாளர்களின் புகலிடமாக அன்னாரின் இல்லம் பொலிந்தது. பஃறுளி முன்றில்- 23,கோயிற் குறுஞ்சாலை, சைதை என்னும் முகவரியில் இருந்த அவ்விலத்தில் நித்தலின்பனார் 1990 வரை வசித்து வந்தார். பின்னர் அவர் கோவைக்கு குடும்பத்துடன் இடம்பெயர்ந்தார். கடந்த நான்காண்டுகளாகக் கோவையிலிருந்து பெயர்ந்து கோபிச்செட்டிப்பாளையத்தில் வாழ்ந்துவந்தார். எயினி இளம்பிறை, ஏந்தல் இரும்பொறை ஆகிய இருவரும் அவரின் பிள்ளைச்செல்வங்கள். மருத்துவர்களாக இவ்விருவரும் திகழ்வதுடன் மருமகன் மருமகள் ஆகிய இருவரையும் மருத்துவராகத் தழுவிக்கொண்டார்.


சேரர்கொற்றம் நிறுவிய நித்தலின்பனார் தன் பெயரை, பொறையன் என்னும் சேரவேந்தர்களின் பெயர்ப்போக்கில் விருப்பம் கொண்டதாலும் இறைமை தழுவிய மனவுணர்விலும் தென்றமிழ் மறை அடிகளிரும்பொறை என மீண்டும் ஒருமுறை பெயர்மாற்றம் செய்துகொண்டார். தன்வயிற்றுப் பேரனுக்கு எவ்வியன் இரும்பொறை எனப்பெயரிட்டார். உற்றார், உறவினர், சுற்றத்தார் ஆகிய பலரும் அவர்பால் சென்று தத்தம் செல்வங்கட்கு தனித்தமிழில் பெயர் சூட்டிக்கொண்டனர். கவின்முல்லை, நவில்யாழினி, சோனை முகில், புனலி, பவிழ் இளங்கதிர், நயநிகை இனியாள், ஓவியமென்பூ, மின்னகஞ்சேரல் போன்று அவர் சுட்டிய குழந்தைப்பெயர்கள் ஆயிரத்திற்கும் மேலாகும்.


மருத்துவர்களாகப் பணிபுரியும் மகனையும், மருமகளையும் காண இடையிடையே இலண்டன் சென்றுவந்த நித்தலின்பனார் ஆங்கிலேயரின் பழக்கவழக்கங்களில் தமிழ்ப்பண்பாட்டின் ஊற்றிருப்பதைக் கண்டு வியந்து பேசினார். இணையவலைத்தளங்களில் தொடர்ந்து மூழ்கியிருந்த நித்தலின்பனார் தமிழ்-தமிழர் நலன் பயக்கும் கருத்துக்களை அதன்வழி பரப்பிவந்தார். அகப்புறப் பகையால் தமிழும் தமிழினமும் அல்லலுற்றுச் சீரழிந்து வரும் இவ்வேளையில் மெய்யுரம் சான்ற தென்றமிழ் அடிகளிரும்பொறை - தென்மறை நித்தலின்பனார் குறைவாழ்நாளில் திடுமென மறைந்தது தமிழுலகிற்குப் பேரிழப்பாகும். அன்னார் நெறியில் தமிழ் - தமிழர் நலன் பேண உறுதியுடன் நாம் பணிதொடர்வோம்.


- கு. அரசேந்திரன்