Friday, May 31, 2013

உரைப்பதெலாம் உளறலே!

முன்னைப்போல் இசைத்திடென்று மன்றாடிக் கேட்டிடுவார்; 
முன்னைப்போல் இசைத்தாலோ முந்தையது தானேவென்பார்! 
உன்னைப்போல் இசைதந்தால் வேறுவிதம் வேண்டிடுவார்; 
உன்னைப்போல் இசைக்காவிடில் எவ்விதம் ஏற்கவென்பார்! 

விண்ணைப்போல் விரிந்து வளியைப்போல் நிறைந்து 
மண்ணைப்போல் தாங்கி மகாநதியைப்போல் பரந்து 
பண்ணால்தம் மனத்துயர் தீய்த்திடும் உன்பேரறிவை 
எண்ணும் வழியற்றோர் உரைப்பதெலாம் உளறலே!

Sunday, May 12, 2013

அன்னையர் தினம்

அம்மா!

நீ இருந்திருந்தால் இந்த நாள் எல்லோரையும் போல் எனக்கும் 'அன்னையர் தினம்' ஆக இருந்திருக்கும்.

ஆனால், இவ்வுலகமெனும் சிறு வெளியைக் கடந்த பேராற்றலாய் என்னுடன் இருந்து என்னுள் இருந்து என்னை வழிநடத்தி மனிதனாய் இயங்கவைத்து உன் அருளால் எனக்குப் பெயரும் புகழும் வாழ்வும் வளமும் தரும் என் மதியாய் நீ என்றென்றும் இருப்பதால் இந்நாள் மட்டுமல்ல, எந்நாளும் எனக்கு உன் நாளே - உன்னாலே!

அனைவருக்கும் எனது இதயம் கனிந்த அன்னையர் தின வாழ்த்துகள்!

Wednesday, April 10, 2013

படைப்பாளனின் பேரிலக்கணம்


கெட்டவர்களின் கெட்டவற்றை நயவஞ்சகமெனச் சித்தரித்து  
கெட்டவர்களின் நல்லவற்றை நாயகர்பண்பெனப் போற்றாமல் -
நல்லவர்களின் கெட்டவற்றை வாழ்வியல்பென உணரவைத்து
நல்லவர்களின் நல்லவற்றை மாமனிதமென எடுத்துரைத்தலே -
கெட்டதை வளர்க்கவிரும்பாத கேடிழைக்க விழையாத
நல்லதொரு திரைப்படப் படைப்பாளனின் பேரிலக்கணம்!

Sunday, March 31, 2013

கடவுளே, நீ யார்?

தொழுபவர்க்கு நன்மைநல்கித் தன்னைவணங்காரைக் கைவிட்டுத்
தோன்றியபடி விதிசமைத்துத் தலையெழுத்தென உரைக்கவிட்டுத்
தெய்வமெனப் பேர்பெற்றிடக் கடவுளெனவுனக்குப் பெயரெதற்கு?
தேவையெலாம் அரசியலாற்றலென்று பொல்லாததற்கும் துணிந்து
அடிவருடுபவர்க்கு அள்ளித்தந்து எதிர்ப்போரை அழித்தொழித்து 
ஆட்சியினை ஆட்டிவைக்கும் சர்வாதிகாரக் கொடுங்கோலனே
இறைவனென இயற்றப்பட்டிருப்பதை அறிந்திருந்தால் உணர்ந்திருப்போம்:
ஈரமனமும் ஈகைக்குணமுமே கோவெனப்போற்றுதலுக்கு உகந்ததென்று!

Wednesday, February 27, 2013

திங்கள்

திங்களுக்கோர் எண்ணப்பதிவை எழுதநினைத்துத் தொடங்கினேன்
திங்களன்று உவகையுடன் பள்ளிசெல்லும் மாணவனைப்போல்!
திங்களாய் மனவானின் ஓரத்தில் வளர்ந்துதேய்ந்தேயிருந்தாலும்
திங்களிறுதியில்தான் முழுநிலவுநாளோ என் கவிநிலவுக்கு?

Monday, February 04, 2013

Artistes and Society

Artistes are creative representatives of the global society. They are initially inspired by the society but some of them eventually grow to the stature of being capable of inspiring the society. Of course, they are indebted to the society for earning from it, as every other person is. However, it should be remembered that even that repayment from an artiste would be in the form of an art. Expecting artistes to perform social service in order to prove their commitment to the society may not be a crime but is definitely greed, especially when the ones who expect so do not perform even a minimal portion of their part.

Thursday, January 31, 2013

கறுத்ததோ என் கருத்து?

கருத்தினைப் பதித்திடப் பேருரிமையெனக்கு உண்டென்று
கருத்தினில் உதித்தகருவினை வளர்த்தேன் - குழந்தையாய்!
கருத்து கறுத்ததென்று கருத்துரைத்தனர் பலகருத்துடையோர் -
கருத்தால் நான்கருதியது கறுந்திணையன்று என்றுரைத்தும்
கறுத்ததென் உள்ளமென்று உலகெங்கும் எடுத்துரைத்தார்!
கறுத்தபணம் கண்டிராத என்வெற்றுப் பொருளகத்தால்தளரா
கறுத்தமனம் கொண்டிராத என்நலம் விரும்பிக்கூட்டமும்
கறுத்துத் தான்போனது - நீதியாலு(ளு)ம் ஆட்சியாலும்!

கருத்தாய்க் கறுத்ததை என்றோ வேறெங்கோ - நான்
கறுக்கியதால் தானோ இன்றெனக்குக் கருவறுத்தல்?