Tuesday, June 02, 2020

நட்சத்திர அர்ச்சனை

 20 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாள். கோவை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமையப்பெற்ற அருள்மிகு வித்யா கணபதி திருக்கோயிலில் #இளையராஜா என்ற பெயருக்கு அர்ச்சனை செய்யச் சொல்லிக் கேட்கிறோம் நானும் சில இசையுணர்ந்த நண்பர்களும். "நட்சத்திரம்?" என்று கேட்டார் அர்ச்சகர். "அவரே நட்சத்திரம் தான்" என்று நினைத்தபடியே "தெரியாது" என்றோம். ஜென்ம நட்சத்திரத்துக்கு அர்ச்சனை செய்து விபூதி கொடுத்தார். எனக்குத் தெரிந்து நேரடியாக என் குடும்பத்துடன் சம்பந்தப்படாத ஒருவருக்கு நான் அர்ச்சனை செய்யச் சொல்லிக் கேட்டது அதுவே முதல் முறை. அல்லது, இவரும் எங்கள் குடும்ப உறுப்பினர் தான் என்று எனக்கு நானே பறைசாற்றி மகிழ ஆசைப்பட்டதன் விளைவே அந்நிகழ்வா என்று தெரியவில்லை.

இருபது ஆண்டுகளில் கடவுள், கோவில், அர்ச்சனை, வேண்டுதல் போன்றவற்றின் மீதுள்ள நம்பிக்கையும் ஈடுபாடும் ஏற இறங்க இருந்தாலும் இவர் நன்றாகப் பலகாலம் வாழ்ந்து இசையால் இன்னும் பல தலைமுறைகளை அரவணைக்க வேண்டுமென்ற உளமார்ந்த அவா மட்டும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இருக்கும்!

இனிய பிறந்தநாள் வணக்கங்கள், எங்கள் இசை ஆதவனே! 

Saturday, October 12, 2019

Towards the Start Line

"After gleefully conferring on me the Gold Medal with trust, Life inaugurated the race and asked me to run it. To gratefully prove that I indeed deserve the First Prize, I have been running tirelessly towards the START LINE, unaware of where it lies!"

The above is the translation I made of the following Tamil verse I wrote on 12-Oct-2018 (exactly a year ago):

"தங்கப்பதக்கம்தனை என்னை நம்பி அணிவித்து அழகு பார்த்தபின் பந்தயத்தைத் துவக்கி வைத்து என்னை ஓடச் சொன்னது வாழ்க்கை. முதல் பரிசுக்கு உரியவன் தான் நானென நன்றியுடன் மெய்ப்பிக்க அயராது ஓடிக் கொண்டிருக்கிறேன் நான் - அடைய வேண்டிய ஆரம்பம் எங்கென்று அறியாது!"

Friday, October 12, 2018

ஆரம்பத்தை நோக்கி!

தங்கப்பதக்கம்தனை என்னை நம்பி அணிவித்து அழகு பார்த்தபின் பந்தயத்தைத் துவக்கி வைத்து என்னை ஓடச் சொன்னது வாழ்க்கை. முதல் பரிசுக்கு உரியவன் தான் நானென நன்றியுடன் மெய்ப்பிக்க அயராது ஓடிக் கொண்டிருக்கிறேன் நான் - அடைய வேண்டிய ஆரம்பம் எங்கென்று அறியாது!

Wednesday, June 06, 2018

அறுந்திடாது அறம்!

அறச்சீற்றத்துக்கும் வெறுங்கோபத்துக்கும் வேறுபாடு 
அறியும் மதியுளோர் சிலரே!

அறச்சீற்றத்தைக் கொடும்வெறியென முரசறைக்கும்
அருமைக் பெருங்கயவரோ பலரே!

எனினும்....

....அறமற்றோர் அறம்பாட அறுந்திடாது அறம்!

Sunday, March 04, 2018

இளைப்பாறல்

நான் பங்கேற்க மாட்டேன் என்று மறுக்க எனக்கு வாய்ப்புத் தரப்படாத நீண்ட நெடியதொரு பந்தயமாயினும் மனம் தளராமல் அயராது ஓடிவந்த களைப்பில் ஒரு நொடி நின்று இளைப்பாறித் திரும்பிப் பார்த்தபோது உணர்ந்தேன்:

நான் கடந்து வந்த அத்தனை பேரும் நானே. என் முன்னே ஓடிக் கொண்டிருப்போரும் நானாகவே இருப்பரோ என்று எண்ணியபடியே ஓட்டத்தைத் தொடர்கிறேன்.

அடுத்த இளைபாறலுக்காக நிற்கும் போதேனும் கேட்டறிய வேண்டும் நான்:

இவர்களுள் எந்த நான் மெய்யான நான் என்பதை!

- நான் (Vijay Venkatraman Janarthanan)

Tuesday, February 13, 2018

சான்றோனின் துன்பம்

சான்றோனென அறியப்படுதலும் ஓர்துன்பமே - ஈன்றபொழுதின் 
பெரிதுவக்கத் தாயில்லாத போழ்து!

- என் குறள்.

Saturday, December 09, 2017

கடவுளைச் சோதித்த வரம்!

நின் தவம்தனை மெச்சினோம் - 
வரமெது வேண்டும் என்று
தன் முகமெலாம் பெருமிதமது  
வழிந்திடக் கேட்டான் அவன்!

உன் படைப்பாம் இவ்வுலகில் 
வாழ்ந்தும் நான் மகிழ்ந்திட
என் இயல்பாம் இரக்கமதை 
வலிய இழக்க வேண்டும்!

ஆதலால் - வரமாய் நீயீந்த 
அன்புடை இதயமாம் இதை
ஈடாய் எடுத்துக் கொண்டு
இன்பமடைய விடு என்றென்!

படைத்தவன் மெல்லத் தலைகுனிந்தான் - 
விடையற்ற தன் நிலையுணர்ந்து!

- ஜ. விஜய் வெங்கட்ராமன்
09-12-2017