Saturday, May 04, 2024

இசையால் மலர்ந்ததே மொழி!

நவம்பர் 6, 1980 அன்று திரைக்கு வந்த இரண்டு படங்கள்:

1) நிழல்கள் - வைரமுத்து எழுதிய முதல் பாடல் இடம்பெற்ற திரைப்படம்.

2) மூடுபனி - இளையராஜா இசையமைத்த 100வது திரைப்படம். 

1976ல் அறிமுகமாகி 4 ஆண்டுகளுக்குள் 100 படங்களுக்கு இசையமைத்து அவற்றில் குறைந்தபட்சம் 100 சூப்பர்ஹிட் பாடல்களைத் தந்து உலகிலேயே யாரும் என்றும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத சாதனையை அன்றே செய்தவர் இளையராஜா என்பது வரலாற்று உண்மை.

வைரமுத்துவால் இளையராஜா ஆதாயம் அடைந்தார் என்போரின் பேச்சைக் கேட்பதற்கு முன்பு இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி இது!

Monday, February 19, 2024

மகிழ்ச்சியும் மலர்ச்சியும்

"அவள் முகம் மலர
அவன் மனம் மகிழும்!
அவன் மனம் மகிழ
அவள் முகம் மலரும்:

இருமுகமும் ஒருமுகமென
இல்வாழ்வில் ஒன்றானதால்!"

இன்று எங்களது திருமண நாளுக்காக வாழ்த்திக் கொண்டிருக்கும் நலம்விரும்பிகளுக்கு நன்றிகளுடன் அடுத்த தலைமுறை இணைகளுக்கு எங்களது அனுபவச் செய்தி இது 😊

- Vijay Venkatraman Janarthanan & Harrini Kumarakrishnan

Tuesday, August 15, 2023

இன்று சுதந்திர தினம் தான் - விடுதலை நாள் அல்ல!

இன்று சுதந்திர தினம் தான் - விடுதலை நாள் அல்ல!

ஆம்! 

தான் இனி அந்நியருக்கு அடிமையாக இல்லையென்ற இறுமாப்பில்

தான் அடிமையாக நடத்துவோரின் உரிமையைச் சட்டை செய்யாது

தான் உருவாக்கும் கற்பிதங்களால் சமத்துவம் மலராது தடுத்தபின்

தான் சுதந்திரம் அடைந்த இந்நாளை
அனைவரும் கொண்டாடுமாறு

தான் கட்டளையிட்டுக் கேட்பதால்
எல்லோரும் மதித்து நடந்திடத்

தான் இந்நாளென்று எண்ணுவோர் அறிவரோ விடுதலையின் பொருளை?

சுதந்திரம் தனி மனிதனுக்கானது! 
இயல்பான தன்னலம் நிறைந்தது! 
தானும் தன்னைச் சார்ந்தோரும் 
தன்னைப் போன்றோரும் எவ்வித 
இடையூறும் இன்றி வாழ்வதே 
சுதந்திரமென எண்ணும் இவர்கள்

தான் அடிமைத்தளையில் இருந்து 
மீள்வது மட்டுமின்றித் தன்னால் 
வேறு யாரும் அடிமைப்படாமல் 
அனைவரும் சமம் என்றெண்ணும் 
உலகை உருவாக்கப் போராடுவதே 
விடுதலையென என்று அறிவரோ?

எனினும், நம்பிக்கையுடன் கொண்டாடுவோம்! சீக்கிரம் நல்லவை நிகழுமென்று!

அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துகள்!

- ஜ. விஜய் வெங்கட்ராமன்
  15 ஆகஸ்ட் 2023

Monday, July 17, 2023

தன்னம்பிக்கை வளர...

பிறப்பினால் பெருமை அடைந்திடாது 
உழைப்பினால் அதனை ஈட்டியதன் 
சிறப்பினை உணரும் போதெல்லாம் 
தழைத்து வளருமே தன்னம்பிக்கை!

Friday, June 02, 2023

நீர் நீரே!

எம்மோடு எப்போதும் இணையாக ஓடிவரும் நதி நீரோ (நீரோ)? அல்லது உம் இசையெனும் நதியால் என்றென்றும் வளம்கொள்ளும் நிலம்தாம் யாமோ? அரை நூற்றாண்டாய் எம் வாழ்வுக்கு முழுமை தரும் நீர் 100 நூற்றாண்டுகள் நலமுடன் வாழ்ந்திருக்க எவரும் ஏற்கும் இறையாய் என்றும் மலர்ந்து நிற்கும் உம் இசையே உமக்கு அருள் செய்யட்டும்! 


நீர் நீரே!


Friday, March 24, 2023

சிறியோர் என்றென்றும் சிறியோரே!

பெரிய ஆளுமைகள் செய்த தவறுகளை மட்டும் பொதுவெளியில் பேசுவதன் வழியாகத் தம் ஆழ்மன வன்மங்களை, மனிதகுலத்தின் மீது தாம் கொண்ட அக்கறை போலக் கட்டமைக்கும் உள்நோக்கம் கொண்ட சிறியோர் என்றென்றும் சிறியோரே!

Sunday, February 19, 2023

வாழ்த்துக்கு நன்றி

இல்லறப் பிணைப்பில் இணைந்து 
ஆண்டுகள் பதினேழைக் கடந்த 
நல்வாழ்வு பதினெட்டில் நுழைய
அன்பு நூறாண்டு செழிக்குமென 

எங்களுக்குத் திருமண நாள் வாழ்த்து தெரிவிக்கும் நட்புகள் உறவுகள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியும் மகிழ்ச்சியும் 🙏🏼😊

- Vijay Venkatraman Janarthanan & Harrini Kumarakrishnan