Saturday, August 31, 2013

கடவுள் ஏன் காணாமல் போனார்?

கடவுள் ஒரு நாள் என் முன்னே தோன்றினார்!
"என்ன வரம் வேண்டும்?" என்று என்னை வினவினார்! 
கண்ட காட்சியை நம்ப முடியா நான் கேட்டதை 
எண்ணி வியந்த படியே முடியா தென்று மறுத்தார்! 

"வேண்டியதைத் தராமல் வேறு என்ன தருவீர்?" என்றதற்கு
"அருள் தருவேன்; பிறருக்கு அருளும் மனம் தருவேன்;
வேண்டா வெறுப்பை மறந்து மகிழும் இதயம் தருவேன்;
அன்பை நகையாய் உன் அகத்துக்குத் தருவேன்" என்றார்!

மெல்லச் சிரித்த நானோ கடவுளைப் பார்த்துக் கேட்டேன்:
"ஒரு வரம் கேட்கச்சொல்லி பல வரங்கள் தருபவரே!
மெல்லிசையை ரசித்துணரும் குணம் வேண்டும் என்றேனே! - அந்த
ஒன்றைத் தந்தால் இத்தனை வரங்கள் வேண்டாமே!" என்று!

தோல்வியெனத் தோன்றியதோ என்னவோ, "வேறேதும் வேண்டுமா?" என்றார்!
"சற்றே சிந்திப்பீர்! பண்ணால்யாம் பெருமின்பமெலாம் உம்மால் தரத்தகுமோ?
தோழனாய்த் தோள்தர நல்லிசை விருப்பம் ஒன்றிருந்தால் அவ்விசையின்
சந்தத்துக்குச் சொல்போல் இவையெலாம் தாமே பின்வருமே!" என்றேன்!

சொல்லி முடித்துத் திரும்பிப் பார்த்த நான் அதிர்ந்தேன்!
சொல்லாமல் கொள்ளாமல் கடவுள் காணாமல் போயிருந்தார்!

2 comments:

incissor said...

மீதி கதை:
அன்று உங்களை சந்தித்த பின் காணாமல் போனவர் தான், பின்பு 1943ல் ஜூன் முன்றாம் தேதி தமிழ்நாட்டில் இசை அவதாரமாக அவதரித்தார், நீங்கள் கேட்ட வரத்தை உங்களுக்கு மட்டுமன்றி எல்லோருக்கும் கொடுப்பதற்காக!

Vijay Venkatraman Janarthanan said...

@incissor

உங்கள் கற்பனை மிகவும் அழகாக மட்டுமல்லாமல் என் கவிதையை வேறொரு தளத்துக்கு எடுத்துச் செல்வதாகவும் அமைந்துள்ளது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது! ஆனால், நான் இக்கவிதையை அப்பொருளில் எழுதவில்லை. இன்னும் சொல்ல வேண்டுமென்றால், 'கடவுள் என்ற புனைவின் பயனும் நல்ல இசையின் பயனும் ஒன்றே' என்ற என் கருத்தைப் பதிவு செய்யவே நான் இதை எழுதினேன். மேலும், கடவுளிடம் நான் வேண்டியது இசையை அல்ல; நல்ல இசையை ரசிக்கும் குணத்தை. அதனை யாரும் யாருக்கும் தர முடியாதென்று நினைக்கிறேன். பிறக்கும் போதே உடன்பிறப்பதல்லவா அது? என்ன சொல்கிறீர்கள்?