Showing posts with label மனம். Show all posts
Showing posts with label மனம். Show all posts

Sunday, August 04, 2024

நண்பன் கண்ணதாசனுக்குப் பிறந்தநாள் வாழ்த்து!

மருத்துவம் நம்மைச் சந்திக்க வைத்தாலும் 
இசையே நம்மை இணைத்து வைத்தது! 
உன்னைப்போலத் தான் நானென்று நீயும் 
என்னைப்போலத் தான் நீயென்று நானும் 
உணர்ந்த அத்தருணத்தில் தொடங்கிய நட்பால் 
எவ்வளவு இசையை பருகியிருப்போம் ஒன்றாக!
எத்தனை மேடைகளில் இசைத்திருப்போம் நன்றாக!
இசைஞானியின் பெருமையினை இணைந்து நாம்உணர 
இசைந்த நம்மனங்கள் வளர்த்த அன்பினால் 
உன்வாழ்வில் நானும் என்வாழ்வில் நீயும் 
இரண்டரக் கலந்திடவே ஒன்றானது நம்வாழ்வு! 
உன்னைநான் வாழ்த்துவதும் என்னைநீ வாழ்த்துவதும் 
வார்த்தைகளாலா? அல்ல! ஒன்றான மனத்தால்!

"ஹே ராஜா! ஒன்றானோம் இன்று! 
இனி நாம் தானே ரெண்டல்ல ஒன்று!"

என்று நமக்குப் பொருத்தமாகப் 
பாடல்தந்து 
நட்பே வாழ்த்திய பெருமையுடன் சொல்வேன்:

Happy Birthday, Partner! Wishing you many more happy returns of the day!

Friday, February 28, 2014

திரையும் திறையும்

பனித்திரை சூழும் பண்புடை நாட்டுக்குப் 
பணித்திறை விலகாப் பற்றுடன் சென்றிட 
மனத்திரை திறந்து மகிழ்வோர் வாழ்த்தும்  
மணத்திறை போதுமே மதியுளோர் வெல்ல!

Saturday, August 31, 2013

கடவுள் ஏன் காணாமல் போனார்?

கடவுள் ஒரு நாள் என் முன்னே தோன்றினார்!
"என்ன வரம் வேண்டும்?" என்று என்னை வினவினார்! 
கண்ட காட்சியை நம்ப முடியா நான் கேட்டதை 
எண்ணி வியந்த படியே முடியா தென்று மறுத்தார்! 

"வேண்டியதைத் தராமல் வேறு என்ன தருவீர்?" என்றதற்கு
"அருள் தருவேன்; பிறருக்கு அருளும் மனம் தருவேன்;
வேண்டா வெறுப்பை மறந்து மகிழும் இதயம் தருவேன்;
அன்பை நகையாய் உன் அகத்துக்குத் தருவேன்" என்றார்!

மெல்லச் சிரித்த நானோ கடவுளைப் பார்த்துக் கேட்டேன்:
"ஒரு வரம் கேட்கச்சொல்லி பல வரங்கள் தருபவரே!
மெல்லிசையை ரசித்துணரும் குணம் வேண்டும் என்றேனே! - அந்த
ஒன்றைத் தந்தால் இத்தனை வரங்கள் வேண்டாமே!" என்று!

தோல்வியெனத் தோன்றியதோ என்னவோ, "வேறேதும் வேண்டுமா?" என்றார்!
"சற்றே சிந்திப்பீர்! பண்ணால்யாம் பெருமின்பமெலாம் உம்மால் தரத்தகுமோ?
தோழனாய்த் தோள்தர நல்லிசை விருப்பம் ஒன்றிருந்தால் அவ்விசையின்
சந்தத்துக்குச் சொல்போல் இவையெலாம் தாமே பின்வருமே!" என்றேன்!

சொல்லி முடித்துத் திரும்பிப் பார்த்த நான் அதிர்ந்தேன்!
சொல்லாமல் கொள்ளாமல் கடவுள் காணாமல் போயிருந்தார்!

Sunday, June 30, 2013

பாடும் பாட்டும்!

பாடுபட்டு உழைத்தும் பாடுபடுத்தா குணத்தைப் 
பழகத்தான் இயலவில்லை - பாடுபடுத்தும் மனத்தால்! 
பாட்டைப் பழகியபின்னோ மனப்பாடு பறந்தது; 
பழகிய இசையாலே பாடுபடுத்தல் மறந்தது! 

Monday, May 31, 2010

பகுத்தறிவும் பேரறிவும்!

'பகுத்தறிவைப்' புகழ்வோரை நான் கண்டதுண்டு!
பகுத்தறிந்து புகல்வோரால் நெஞ்சம் மகிழ்ந்ததுண்டு!
'பகுத்தறிவைப்' பற்றிப் பகுத்தறிதல் மறந்தமனங்களைப்
பகுத்தறிந்து புலமைதந்து காத்திடுவாய் பேரறிவே!

Thursday, April 30, 2009

விதியும் வாழ்வும்!

கண்களுக்குள் எரியும்போதும் உறக்கந்துறந்து தொடரும்
உடல்முழுக்கக் கெஞ்சும்போதும் ஓய்வெடுக்க மறுக்கும்
கற்பனையில் பறக்கும்போது ஆற்றலுடன் விளங்கும்
உருவமற்ற மனமேநீ விதிப்பதுதான் எம்வாழ்வோ?