Monday, June 02, 2025

எங்கள் இசை ஆதவனே!

இன்று இசைஞானி இளையராஜாவின் 82ம் பிறந்தநாள்!

அவரைப் பற்றி எழுத எத்தனையோ இருக்கின்றன! பணிச்சுமை காரணமாகப் புதிதாக எதையும் சிந்திக்க இன்றைய நாள் முழுவதும் எனக்கு வாய்ப்பு அமையவில்லை. ஆனால், நான் அதிகம் கேட்டிராத (கீழே குறிப்பிட்டுள்ள) அவரது இரண்டு பாடல்களைக் கவனித்துக் கேட்கும் வாய்ப்பு எதிர்பாராத வகையில் இன்று கிடைத்தது:

1) 1992ம் ஆண்டு வெளியான கில்லர் என்ற தெலுங்குப் படத்தில் இடம்பெற்ற 'ரம்பலகே ரன்ஸுமொஹுன்னி' என்ற துள்ளலிசைப் பாடல்.

2) இன்னும் மூன்று நாட்களில் வெளியாக இருக்கும் தமிழ்த் திரைப்படமான 'பேரன்பும் பெருங்கோபமும்' படத்தில் இடம்பெற்றுள்ள 'ஒரு மனைவியாய்' என்ற மெல்லிசைப் பாடல்.

மேற்கூறிய இரண்டு பாடல்களும் எல்லா விதங்களிலும் வேறுபட்டவை. ஆனால், அவற்றில் உள்ள முத்திரை ஒன்று - எவராலும் முழுக்க நகலெடுக்க முடியாத ராஜமுத்திரை! என்னென்ன உணர்ச்சிகள் உயிர்களுக்கு ஏற்பட வாய்ப்பு இருக்கிறதோ அத்தனைக்கும் அவர் பாடல் செய்திருக்கிறார் எனினும், அதனினும் சிறந்ததாக நான் பார்ப்பது, அவற்றில் உள்ள அவரது தனித்துவத்தையே! 

கடந்த 30 ஆண்டுகளாக ஒரு ஆத்மார்த்தமான ரசிகனாக அவரது படைப்புகளைத் தேடித் தேடிக் கேட்கக்கூடிய எனக்கு, பழைய பாடலோ புதிய பாடலோ, அவரது எந்த ஒரு பாடலையும் முதன்முறையாகக் கேட்கும் போது ஏற்படும் வியப்பு குறைந்ததே இல்லை என்பது இப்போதெல்லாம் எனக்கு வியப்பாக இல்லை. எப்போதும் இன்ப இசை ஆச்சர்யங்களைத் தனக்குள் வைத்திருந்து நாம் விரும்பும் போதெல்லாம் நமக்குத் தரும் நமக்கே நமக்கான ஒரு அட்சய பாத்திரத்தை எவ்வாறு வார்த்தைகளால் புகழ்ந்து தீர்த்திட முடியும்?

இன்னும் நூறாண்டு காலம் வாழ்ந்து இன்னும் பல்லாயிரம் இசைக்காவியங்கள் படையுங்கள், எங்கள் இசை ஆதவனே!


எங்கள் இசை ஆதவனே!



Friday, April 18, 2025

அறமெனும் உலக நியதி

அறம் செய்ய விரும்புவோருக்கு மட்டுமே அறம் பிறழ்வதில் உள்ள பாவம் புரியும். 

பிறழ்வே நியதியாகிப் போன உலகிலோ 'அறமற்று இருப்பதில் என்ன பெரிய தவறு இருக்கிறது?' என்ற கேள்வியே எழும்!

Saturday, February 15, 2025

உரிமைப் போராட்டக்காரர்கள் எல்லோருமே சுயமரியாதைக்காரர்களா?

தனது உரிமைகள் தனக்கு மேலே வைக்கப்பட்டோர்களால் பறிக்கப்படும் போது, உயிரைக் கொடுத்தாவது அவற்றை மீட்கப் போராடுபவனை உரிமைப் போராட்டக்காரன் எனலாம். ஆனால், தன்னைவிடக் கீழே வைக்கப்பட்டோரின் உரிமைகளை அவர்கள் அறியாதபோதும், அவற்றை அவர்களுக்குப் புரியவைத்து, அவர்களும் அந்த உரிமைகளை அடைய வழிவகை செய்பவனே சுயமரியாதைக்காரன்.

இருவருக்கும் ஒரு முக்கியமான வேறுபாடு உண்டு: பல நேரங்களில், தனது உரிமைகளுக்காக மட்டுமே போராடும் உரிமைப் போராட்டக்காரன், தனக்கு மேலே வைக்கப்பட்டோர்களுக்குச் சமமாக இருக்க வேண்டுமென்பதை விட, தானும் சிலருக்கு மேலாக இருக்க வேண்டியவன் என்பதையே நிறுவ விரும்புகிறான். ஆனால், சுயமரியாதைக்காரனோ, தன்னைவிடக் கீழே வைக்கப்பட்டவர்களும் தனக்குச் சமமானவர்களே என்பதை நன்கு அறிந்து, அவர்களும் அதனை உணர்ந்து, அவர்களது உரிமைகளை நிலைநாட்ட வழிவகை செய்து, ஏற்றத்தாழ்வு அற்ற ஒரு சமத்துவ சமுதாயத்தை உருவாக்குவதில் தன் பங்கை நேர்மையாக ஆற்ற முயல்கிறான்.

எனவே, உரிமைப் போராட்டக்காரர்கள் எல்லோருமே சுயமரியாதைக்காரர்கள் அல்லர் என்பதை உணர்வது நம் மதிக்கு நன்மை தரும்.

புரிய வேண்டியவர்களுக்குப் புரிவதற்காக எழுதுகிறேன்!

Saturday, January 25, 2025

நம்பினார் கெடுவதில்லை!

ஒருவரை நம்பியதனால் நான் அடைந்த ஏமாற்றத்தைப் பாடுபட்டு ஏற்றுக்கொண்டு அதனைக் கடந்து செல்லும் ஒவ்வொரு முறையும் அடுத்ததாக ஒருவரை நம்பும் வல்லமையை நான் கொஞ்சமேனும் இழக்கத் தான் செய்கிறேன். எனினும், "தான் நம்பப்படவில்லையே" என்ற ஆதங்கம் நாணயமுள்ள எந்த ஒருவருக்கும் என்னால் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற அக்கறையால் நான் மீண்டும் முன்முடிவற்று நம்பத் தொடங்குகிறேன் - நான் நம்ப விரும்புபவர்களை; ஏமாறுவதற்கு முன்னரே விழித்துக் கொள்ளும் பாடத்தைக் கற்றுத் தெளிந்து விட்டேன் என்ற என் நம்பிக்கையை மட்டும் துணையாகக் கொண்டு!

- ஜ. விஜய் வெங்கட்ராமன் 
(25 ஜனவரி 2025)

Sunday, December 22, 2024

பிச்சை

பொருள் வேண்டித் தன்னை நோக்கி நடந்து வரும் பிச்சைக்காரரிடம் கண்களாலேயே அருள் பிச்சை கேட்டார் தன் சட்டைப்பையில் சில்லறை இல்லை என்பதை முன்பே அறிந்திருந்த செல்வந்தர்!

Sunday, August 04, 2024

நண்பன் கண்ணதாசனுக்குப் பிறந்தநாள் வாழ்த்து!

மருத்துவம் நம்மைச் சந்திக்க வைத்தாலும் 
இசையே நம்மை இணைத்து வைத்தது! 
உன்னைப்போலத் தான் நானென்று நீயும் 
என்னைப்போலத் தான் நீயென்று நானும் 
உணர்ந்த அத்தருணத்தில் தொடங்கிய நட்பால் 
எவ்வளவு இசையை பருகியிருப்போம் ஒன்றாக!
எத்தனை மேடைகளில் இசைத்திருப்போம் நன்றாக!
இசைஞானியின் பெருமையினை இணைந்து நாம்உணர 
இசைந்த நம்மனங்கள் வளர்த்த அன்பினால் 
உன்வாழ்வில் நானும் என்வாழ்வில் நீயும் 
இரண்டரக் கலந்திடவே ஒன்றானது நம்வாழ்வு! 
உன்னைநான் வாழ்த்துவதும் என்னைநீ வாழ்த்துவதும் 
வார்த்தைகளாலா? அல்ல! ஒன்றான மனத்தால்!

"ஹே ராஜா! ஒன்றானோம் இன்று! 
இனி நாம் தானே ரெண்டல்ல ஒன்று!"

என்று நமக்குப் பொருத்தமாகப் 
பாடல்தந்து 
நட்பே வாழ்த்திய பெருமையுடன் சொல்வேன்:

Happy Birthday, Partner! Wishing you many more happy returns of the day!

Friday, July 12, 2024

அன்பு பாரமா?

சுமக்க முடியாத பாரமாக மாறிவிடுவதில்
தன்னிகரற்றுத் திகழ்கிறது "அன்பு"!

சில நேரங்களில்
அது மற்றவர்கள் நம் மீது வைத்திருக்கும் அன்பாக இருந்தாலும்,
பல நேரங்களில்
அது நாம் மற்றவர்கள் மீது வைத்திருக்கும்
அன்பாகவே இருக்கிறது!

Saturday, May 04, 2024

இசையால் மலர்ந்ததே மொழி!

நவம்பர் 6, 1980 அன்று திரைக்கு வந்த இரண்டு படங்கள்:

1) நிழல்கள் - வைரமுத்து எழுதிய முதல் பாடல் இடம்பெற்ற திரைப்படம்.

2) மூடுபனி - இளையராஜா இசையமைத்த 100வது திரைப்படம். 

1976ல் அறிமுகமாகி 4 ஆண்டுகளுக்குள் 100 படங்களுக்கு இசையமைத்து அவற்றில் குறைந்தபட்சம் 100 சூப்பர்ஹிட் பாடல்களைத் தந்து உலகிலேயே யாரும் என்றும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத சாதனையை அன்றே செய்தவர் இளையராஜா என்பது வரலாற்று உண்மை.

வைரமுத்துவால் இளையராஜா ஆதாயம் அடைந்தார் என்போரின் பேச்சைக் கேட்பதற்கு முன்பு இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி இது!

Monday, February 19, 2024

மகிழ்ச்சியும் மலர்ச்சியும்

"அவள் முகம் மலர
அவன் மனம் மகிழும்!
அவன் மனம் மகிழ
அவள் முகம் மலரும்:

இருமுகமும் ஒருமுகமென
இல்வாழ்வில் ஒன்றானதால்!"

இன்று எங்களது திருமண நாளுக்காக வாழ்த்திக் கொண்டிருக்கும் நலம்விரும்பிகளுக்கு நன்றிகளுடன் அடுத்த தலைமுறை இணைகளுக்கு எங்களது அனுபவச் செய்தி இது 😊

- Vijay Venkatraman Janarthanan & Harrini Kumarakrishnan

Monday, July 17, 2023

தன்னம்பிக்கை வளர...

பிறப்பினால் பெருமை அடைந்திடாது 
உழைப்பினால் அதனை ஈட்டியதன் 
சிறப்பினை உணரும் போதெல்லாம் 
தழைத்து வளருமே தன்னம்பிக்கை!

Friday, June 02, 2023

நீர் நீரே!

எம்மோடு எப்போதும் இணையாக ஓடிவரும் நதி நீரோ (நீரோ)? அல்லது உம் இசையெனும் நதியால் என்றென்றும் வளம்கொள்ளும் நிலம்தாம் யாமோ? அரை நூற்றாண்டாய் எம் வாழ்வுக்கு முழுமை தரும் நீர் 100 நூற்றாண்டுகள் நலமுடன் வாழ்ந்திருக்க எவரும் ஏற்கும் இறையாய் என்றும் மலர்ந்து நிற்கும் உம் இசையே உமக்கு அருள் செய்யட்டும்! 


நீர் நீரே!


Friday, March 24, 2023

சிறியோர் என்றென்றும் சிறியோரே!

பெரிய ஆளுமைகள் செய்த தவறுகளை மட்டும் பொதுவெளியில் பேசுவதன் வழியாகத் தம் ஆழ்மன வன்மங்களை, மனிதகுலத்தின் மீது தாம் கொண்ட அக்கறை போலக் கட்டமைக்கும் உள்நோக்கம் கொண்ட சிறியோர் என்றென்றும் சிறியோரே!

Sunday, February 19, 2023

வாழ்த்துக்கு நன்றி

இல்லறப் பிணைப்பில் இணைந்து 
ஆண்டுகள் பதினேழைக் கடந்த 
நல்வாழ்வு பதினெட்டில் நுழைய
அன்பு நூறாண்டு செழிக்குமென 

எங்களுக்குத் திருமண நாள் வாழ்த்து தெரிவிக்கும் நட்புகள் உறவுகள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியும் மகிழ்ச்சியும் 🙏🏼😊

- Vijay Venkatraman Janarthanan & Harrini Kumarakrishnan

Tuesday, January 31, 2023

என்னுடன் வாழ்கநீ நூறாண்டு!

என்னைத் தன்னுடன் இணைத்தும் 
என்னை நானென்ற இயல்புடனே 
என்னை என்னிற் சிறந்தவனாக்க 
என்னை என்றும் முயலவைக்கும் 

என்னவளே உனைப்போல் யாருண்டு? 
என்னுடன் வாழ்கநீ நூறாண்டு!

(31 ஜனவரி 2023 அன்று என் மனைவியின் பிறந்தநாளுக்கு வாழ்த்தாக எழுதியது)

Monday, January 02, 2023

யாராக இருப்பது நான்?

"எவருக்கும் தீங்கு இழைக்க 
நினைக்கும் அளவுக்குக் கூட 
நீ தீயவனாக இருந்திடாதே!

உனக்கு இழைக்கப்படும் தீங்கினை 
உணர இயலாத அளவுக்கு 
நல்லவனாகவும் இருந்திடாதே!"

- 2023ம் ஆண்டுக்கான என் சிந்தனை :-)

Wednesday, July 06, 2022

வியப்பும் கவலையும்

எதன் பொருட்டு உனக்கு ஒன்று மறுக்கப்பட்டதோ அதன்பொருட்டே அது உன்னைக் காலங்கடந்து வலியத் தேடி வந்தது வியப்புக்குரியது எனினும் 

எதன் பொருட்டு உனக்கு அது உண்மையாகக் கிடைத்திருக்க வேண்டுமோ அதன்பொருட்டு அது இதுவரை கிடைக்காதது தான் அதனினும் கவலைக்குரியது!

Wednesday, May 04, 2022

Character isn't the author of Destiny!

An unintended trilogy of posts:

"A person who does not harbour contemptuous feelings in their heart is a blessing to their near and dear. However, this very part of their character is a curse to themselves, for these hearts are the ones which get easily broken but can afford to cry only in silence and loneliness." (1/3)

"Life is unfairly favorable to a person who doesn't care about others' feelings being hurt. If they encounter a person who has genuine concern for others, they selfishly enjoy the benefits this other person can provide. If they encounter someone like themselves, they have nothing to complain anyway. Why do you practise this injustice, Life?" (2/3)

"If you be good, there is no guarantee that all good will happen to you; If you are bad, there is no compulsion that your fate will be bad. You are good only because you can't be anything but good; You are bad only because you can't be anything but bad. Unfortunately, Character isn't the author of Destiny." (3/3) 

Ironically, the first two posts in the trilogy were written on 4th May 2018 whereas the third (which also appears to be the answer to the mind-boggling questions asked by the first two) was made on 2nd May 2011. Yes - you read it right :-)

Strange are the ways of Life!

Tuesday, February 22, 2022

To Remember or To Forget?

If you do not want to forget the occasions in which others hurt your feelings, you must also remember the occasions in which you hurt the feelings of others.

If you wish to forget the occasions in which others hurt your feelings, you must also stop remembering the occasions in which you hurt the feelings of others.

You can only choose one of these options. Choosing a part each from both these options makes you either a sadist or a masochist, with neither of these going to help anyone in the long run.

It is best to forgive yourself as well as others for past mistakes, at least after a note of apology has been tendered. But, if you aren't mature enough to do that, at least be fair in punishing yourself as much as you would punish others.

#randomthoughts #originalcontent

Saturday, July 24, 2021

வயதுக்கு மரியாதை; கருத்துக்கு மதிப்பு

குழந்தைகளுக்கு அறிவுரை கூறும்போது "வயதில் பெரியவர்களுக்கு மரியாதை கொடு" என்று மட்டும் சொல்லாமல் "உன்னைவிடச் சிறியவர்களின் கருத்துகளுக்கும் மதிப்பு கொடு" என்றும் சேர்த்துச் சொன்னால் அது அந்தக் குழந்தைகள் பெரியவர்களாகும் போதும் அவர்களுக்கு என்றென்றும் நன்மை பயப்பதாக அமையும்!

Wednesday, July 15, 2020

சிறிதிலும் பெரிதுண்டு

15 ஜூலை 2017:

வில்லின் அம்பால்வீழா மாவீரனும் அன்பிலாச் 
சொல்லின் அம்பால் நிலைகுலைவான் எனில் 
அறிக அவன்மனம் யாருக்கும் தீங்கிழைக்கா 
சிறிய குழந்தையின் பேருள்ளமென்று!


15 ஜூலை 2019:

நிலைகுலைந்த அச்சிறிய குழந்தை அச்சத்தால் தன் பேருள்ளத்தைக் குறுக்கி மற்ற எவரையும் போல நமக்கென்ன என்ற நிலையினை மனம்வெதும்பி எட்டியபடியே தன்னலம் பேணத் தொடங்கிய பின் உலகம் அதனைப் பாராட்டிப் பறைசாற்றியது "நீ நன்கு வளர்ந்துவிட்டாய்" என்று!