Sunday, March 30, 2014

அன்பின் நட்பும் நட்பின் அன்பும்

நட்பு எனக்கு அன்பு செய்ததால் அன்புக்கு நட்பானேன்;
அன்புடன் பழகப் பழகவே பல்கிப் பெருகியது நட்பு!
அன்பின் நண்பனென்றும் நட்பின் அன்பனென்றும்
நட்பும் அன்பும் எனைக்காத்துக் கொண்டாட,
வியந்து நின்றது வினை - என்னை 
வீழ்த்தும் வழி எதுவென்று அறியாது!

துன்பமெனும் அம்பை இறுமாப்புடன் எய்தது வினை; 
ஆறுதலால் உயிர்த்தெழச் செய்தது நட்பின் அன்பு!
துரோகம் கொண்டு நிலைகுலைக்க எண்ணியது வினை;
ஆதரவாய்க் கயமையை வென்றது அன்பின் நட்பு!
தாக்கவோர் ஆயுதமின்றித் திகைத்த வினை
தயங்கியே ஏற்றது தான் தோற்றதை!

Friday, February 28, 2014

திரையும் திறையும்

பனித்திரை சூழும் பண்புடை நாட்டுக்குப் 
பணித்திறை விலகாப் பற்றுடன் சென்றிட 
மனத்திரை திறந்து மகிழ்வோர் வாழ்த்தும்  
மணத்திறை போதுமே மதியுளோர் வெல்ல!

Friday, January 31, 2014

திறனாய்வு

தன்னை உணராது தன்திறன் அறியாது 
தன்னைத் தானே தாழ்த்தி உயர்த்தும் 
தன்மையால் நன்மை நேராதென்று உணரும் 
தன்மையே தாழ்வற்ற உயர்வான திறன்!

Saturday, January 11, 2014

இறந்தும் இரப்பவள் யார்?

இரக்க குணம்தனை இருக்கையில் 
இறக்கச் செய்து வாழ்பவர்கள் இருக்க, 
இறந்தும் தன் மக்களுக்கு 
இரந்து வாழ வைப்பவள் தாய்!


- கைபேசி கொண்டு தமிழில் நான் எழுதும் முதல் பதிவு!